16th November 2023 08:24:16 Hours
இலங்கை இராணுவம் மற்றும் இந்திய இராணுவம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த 'மித்ர சக்தி' இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள 29 அதிகாரிகள் மற்றும் 94 சிப்பாய்கள் கொண்ட குழு வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் இன்று ( 15) பிற்பகல் இந்தியா புறப்பட்டது.
இந்தியாவின் புனேவில் உள்ள இந்திய இராணுவத்தின் 330 வது காலாட் பிரிகேட்டில் 'மித்ர சக்தி' பயிற்சி வியாழக்கிழமை (16) தொடக்கம் 2023 நவம்பர் 29 வரை நடைபெறும்.
‘மித்ர சக்தி’ கூட்டு இராணுவப் பயிற்சி இயங்குதன்மை, இராணுவ ஒத்துழைப்பு, கூட்டு தந்திரோபாய நடவடிக்கைகள், நாடுகடந்த இராணுவப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வது, அனுபவங்களைப் பகிர்தல் போன்றவற்றை உள்ளடக்கியது. இது 2012 ஆம் ஆண்டிலிருந்து இரு இராணுவ நிறுவனங்களுக்கிடையில் நடைபெற்று வரும் வருடாந்த பயிற்சித் திட்டமாகும்.
53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீ.ஜீ.பீ.எஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் தலைமையிலான இலங்கை இராணுவக் குழுவின் பயிற்சி பணிப்பாளர் கேணல் எம்.ஜே உபேசேகர ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, பிரதி பணிப்பாளர் கேணல் பி.வை நாணயக்கார ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, பயிற்சி வழங்கல் கட்டளை கேணல் ஆர்.எம்.எஸ் ரணசிங்க ஆகியோர் தங்கள் சகாட்களுடன் இந்திய இராணுவத்துடனான நட்புரீதியான பயிற்சியில் பங்கேற்பர்.
இத் தொடரின் ஒன்பதாவது பயிற்சியான இப் பயிற்சியில் குறிப்பாக கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, ஆயுதப் பயிற்சி, அடிப்படை இராணுவ யுக்திகள் மற்றும் கடினாமான போர் உத்திகள் மற்றும் செயல்பாடுகளை நடத்துவதற்கான நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் கூட்டு உத்திகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.