இலங்கை பீரங்கி படையணியின் லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 25 வது இராணுவ தளபதியாக 2024 டிசம்பர் 31 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிமேதகு ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்க அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அதே திகதியில் நிலை உயர்த்தப்பட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய நியமனத்திற்கு முன்னர், லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியாக கடமையாற்றியிருந்தார்.
லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியின் பெருமைக்குரிய பழைய மாணவராவார். மேலும் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயல்பாடுகளில் சிறந்து விளங்கினார். அவர் ஒரு துடிப்பான விளையாட்டு வீரராகவும், தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கல்லூரி மாணவ தலைவராகவும் இருந்துள்ளார். அவர் பாடசாலையில் கிரிக்கெட், கூடைப்பந்து மற்றும் ரக்பி அணிகள் மற்றும் பாடசாலை தடகள அணியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


லெப்டினன் ஜெனரல்
லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ
சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ
லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் 1989 ம் ஆண்டு ஜூலை 20 ம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பாடநெறி 31 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் அதிகாரவாணை வழங்கப்பட்டு இலங்கை பீரங்கி படையணியில் நியமிக்கப்பட்டார்.
அவரது 36 ஆண்டுகால புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில், பல குறிப்பிடத்தக்க கட்டளை, பணிநிலை மற்றும் அறிவுறுத்தல் நியமனங்களை வகித்துள்ள அவர், மதுரு ஓயா இராணுவ பயிற்சிப் பாடசாலையில் அதிகாரி பயிற்றுவிப்பாளர், செயல்பாட்டு பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி II (புலனாய்வு/பாதுகாப்பு), 53 வது காலாட் படைப்பிரிவின் பொதுப்பணி நிலை அதிகாரி II (செயல்பாடுகள்), 22 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணிநிலை அதிகாரி I (செயல்பாடுகள்), தொப்பிகல மற்றும் மன்னார் மோதலின் பின்னரான மனிதாபிமான நடவடிக்கைக்கு அடுத்து இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் இடம்பெற்ற போது 18 வது இலங்கை களப் பீரங்கிப் படையணி கட்டளை அதிகாரி போன்ற பதவிகளை வகித்துள்ளார்.
அவர் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரிகள் ஆய்வு மையத்தில் பயிற்சிக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார், அதிகாரிகள் ஆய்வு மையத்தில் தலைமை பயிற்றுவிப்பாளர், பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்விசார் பணியாளர் மற்றும் பயிற்சி குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் பூநகரி 663 மற்றும் 661 வது காலாட் பிரிகேட்களுக்கு தலைமை தாங்கியுள்ளதுடன், 2018 மற்றும் 2019 ம் ஆண்டுகளில் தேசத்தை கட்டியெழுப்புதல், புனரமைப்பு மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு பங்களிப்பு வழங்கியுள்ளார். அவர் இராணுவ தலைமையகத்தில் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளராகவும், பூநகரின் 66 வது காலாட் படைப்பிரிவின் தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளதுடன் நல்லிணக்கம், புனரமைப்பு மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்தல் ஆகிய முயற்சிகளுக்கும் முக்கிய பங்களிப்பு வழங்கியுள்ளார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதி, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மற்றும் இலங்கை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி ஆகிய பதவிகளையும் வகித்தவர்.
லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ விரிவான பயிற்சி மற்றும் தொழில்முறை மேம்பாடு மூலம் தனது நிபுணத்துவத்தை விரிவுபடுத்திக் கொண்டவர். தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அடிப்படை பயிலிளவல் அதிகாரி பாடநெறி மற்றும் மதுரு ஓயாவில் அணி கட்டளையாளர் பாடநெறி உட்பட பல உள்ளூர் பாடநெறிகளை அவர் வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அவரது சர்வதேசப் பயிற்சியில், இந்தியா தெஹ்ராதூணில் பயிலிளவல் அதிகாரிகள் பாடநெறி, இந்தியாவில் இளம் பீரங்கி அதிகாரிகள் பாடநெறி, இந்தியாவில் அதிகாரிகளின் உடற் தகமை பாடநெறி, பாகிஸ்தான் - குறிப்பார்தல் பாடநெறி (ஓஎல்-52), உயர் பீரங்கி (கள) பாடநெறி 1575 - இந்தியா, நீண்டகால பீரங்கி பணிநிலை பாடநெறி – இந்தியா, பீரங்கி படையலகு கட்டளை அதிகாரி பாடநெறி சீனா மற்றும் இந்தியா உயர் பாதுகாப்பு ஒழுங்குப்படுத்தல் பாடநெறி ஆகிய கற்கைகளையும் கற்றுள்ளார்.
மேலும், (2019 - 2020), சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுறவு மூலோபாய பாதுகாப்பு ஆய்வுகள் முதுகலைப் பட்டம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் - வாஷிங்டன் அமெரிக்கா, பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலை அறிவியல் - ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், அமெரிக்கா கூட்டு வல்லுநர்கள் இராணுவக் கல்வியில் டிப்ளோமா கட்டம் இரண்டு மற்றும் சிரேஷ்ட நிலை கல்வி - தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் வாஷிங்டன் அமெரிக்கா, நீண்ட பீரங்கி பணி நிலை பாடநெறி பீரங்கி பாடசாலை இந்தியா, இலங்கை இராணுவ கட்டளை மற்றும் பணி நிலை கல்லூரி பட்டம் (தற்போதைய பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி) இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் பட்டம், இந்தியா தெஹ்ராதூணி இராணுவ கல்வியற் கல்லூரி பட்டம் என்பவற்றையும் கொண்டுள்ளார்.
எதிரிகளை எதிர்த்துப் போராடிய சிறந்த நடத்தைக்காக அவர் ரண சூர பதக்கம் (ஆர்எஸ்பீ) வழங்கப்பட்டுள்ளதுடன், லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், பூரண பூமி பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம், ரிவிரெச நடவடிக்கை சேவை பதக்கம், 50 வது சுதந்திர தின பதக்கம், 75வது சுதந்திர தின பதக்கம், இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவு பதக்கம் போன்ற சேவை மற்றும் அலங்காரங்களையும் பெற்றுள்ளார். இலங்கை இராணுவத்தின் 50 வது ஆண்டு பதக்கம், இலங்கை ஆயுத சேவைகள் நீண்டகால சேவை பதக்கம், சேவாபிமானி பதக்கம் மற்றும் சேவை பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
வாஷிங்டன் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுறவு நிகழ்ச்சியின் சர்வதேச மாணவர் குழுவின் தலைவராக பணியாற்றியதுடன், அதே நிகழ்சியின் போது சிறந்த வெளிநாட்டு மாணவர் விருதுக்கு 2020ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இலங்கையின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதியாக நியமிக்கப்பட்டு, சிரேஷ்ட பதவியில் மிகச் சில அதிகாரிகளால் மட்டுமே பெறப்பட்ட ஒரு தனித்துவமான நியமனத்தை பெற்றுள்ளார். அவரின் பதவிக்காலத்தில் சாதனைகளைக் குறிக்கும் வகையில் 11 நட்பு நாடுகளைச் சேர்ந்த 75 வெளிநாட்டு அதிகாரிகளைத் தவிர, இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளுக்கு மேஜர் மற்றும் அதற்கு இணையான தரத்தில் கிட்டத்தட்ட 450 மத்திய தர அதிகாரிகளுக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பயிற்சியளித்துள்ளார். இது மூன்று சேவைகளிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் நட்பு நாடுகளின் அதிகாரிகளின் தரம், திறன் மற்றும் இயலுமை ஆகியவற்றை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளார்.
2023 மற்றும் 2024ம் ஆண்டில் பங்களாதேஷின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் ஆசிரிய மற்றும் மாணவர் அதிகாரிகளுக்கு "பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இலங்கையின் அனுபவம்" என்ற கோரிக்கை கருத்தரங்கை நடத்துவதற்காக இலங்கையின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் சிறப்புக் குழுவிற்கும் அவர் தலைமை தாங்கியுள்ளார்.
அவர் திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோவை மணந்து ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களின் தந்தையாவர்.