13th September 2023 08:23:09 Hours
நாட்டின் 2வது தென்னை முக்கோணத்தை முல்லைத்தீவு பிரதேசத்தில் நிர்ணயம் செய்யும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு முழுமையாக ஆதரவளிக்கும் வகையில், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின், 64 வது காலாட் படைப்பிரிவின் படையினர், தென்னை வளர்ப்பில் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கு தென்னம்பிள்ளைகளை விநியோகிக்கும் திட்டத்தை சனிக்கிழமை (9) 64 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் முன்னெடுத்தனர்.
64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்எஸ் தேவப்பிரிய யுஎஸ்பீ என்டிசி அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்வின் முதலாம் கட்டமாக 'தேசிய தென்னம்பிள்ளைகள் வாரத்தை முன்னிட்டு 100 தென்னம்பிள்ளைகள் 55 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கிய '2வது தென்னை முக்கோணத்தை' நிறுவுவதற்கு உத்தேசமாக 20,000 தென்னம்பிள்ளைகளை முல்லைத்தீவு மாவட்டத்தில் நடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திடம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் 20,000 மரக்கன்றுகள் நடும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு உத்வேகம் அளித்த வெள்ளம்குளம் இராணுவப் பண்ணை 2700 தென்னங்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க அரச அதிகாரிகளுக்கு வழங்கியது.
64 வது காலாட் படைப்பிரிவின் தளபதி இந்த திட்டத்தைத் தொடங்கியதுடன் அவரது படையினர்களின் ஆதரவுடன் விநியோக ஏற்பாட்டை ஏற்பாடு செய்தார். இந்நிகழ்வில் 68 மற்றும் 59 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.