06th July 2023 22:01:44 Hours
மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த 20 வயது இளைஞரான திரு.தவேந்திரன் மதுஷிகன் அண்மையில் இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரை இந்தியப் பெருங்கடலை நீந்திய 4வது நபராக சாதனை படைத்தார்.
231 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் திலுப பண்டார அவர்களின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு 231 வது காலாட் பிரிகேட் படையினர் சாதனையாளருக்கு அவரது சொந்த ஊரில் வரவேற்பளித்ததுடன் அவரை 231 வது காலாட் பிரிகேட் தலைமையகத்திற்கு வரவழைத்து கௌரவித்தனர்.
இத் தமிழ் இளைஞர் இந்தியாவிலிருந்து தலைமன்னாருக்கு கிட்டத்தட்ட 12 மணி 58 நிமிடங்களில் நீந்திக் கடந்தார. 231 வது காலாட் பிரிகேட் தளபதி பாராட்டு விழாவின் போது அவரது துணிச்சலான செயலைப் பாராட்டியதுடன் பாராட்டுச் சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னத்தையும் வழங்கினார்.
இதே நிகழ்வின் போது மட்டக்களப்பு எம்ஜேஎப் லயன்ஸ் கழகம் இளைஞருக்கான பண காசோலையை வழங்கி அவரின் அர்ப்பணிப்பை உயர்வாக எடுத்துரைத்தது.
மட்டக்களப்பு மாவட்ட செயலாளர், மட்டக்களப்பு பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் அதிபர், இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் மற்றும் அவரது அன்புப் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறந்த நீச்சல் வீரர் திரு.தவேந்திரன் மதுஷிகனின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.