Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th September 2022 18:09:30 Hours

இராணுவ 73 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு இஸ்லாமிய 'கிராத்' மற்றும் 'துவா' பிரார்த்தனைகள்

இராணுவத்தின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 26ம் திகதி காலை கொள்ளுபிட்டி ஜும்மா பள்ளிவாசலில் இராணுவ முஸ்லிம் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இஸ்லாமிய மத முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இராணுவத்திற்கு ஆசி வேண்டி சிறப்பு இஸ்லாமிய மத வழிபாடுகள் இடம்பெற்றன.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவ முஸ்லிம் சங்கத்தின் தலைவர் பிரிகேடியர் அஷ்கர் முத்தலிப், செயலாளர் லெப்டினன் கேணல் பிரோஷ் ஜலால் மற்றும் பள்ளிவாயல் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து கொள்ளுப்பட்டி ஜும்மா பள்ளிவாசலில் அன்புடன் வரவேற்றனர்.

இஸ்லாமிய மத மரபுகளுக்கு அமைவாக தலைமை மௌலவி அவர்கள் பயான் பிரார்த்தனை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அங்கு ஆற்றிய வரவேற்பு உரையினை நிகழ்த்திய மௌலவி நிகழ்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

நாட்டின் நலன்களுக்காக இராணுவத்தின் சேவைகளைப் பாராட்டி இஸ்லாமிய மத சம்பிரதாயமாக ‘பயான்’ நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் இராணுவக் கொடிக்கு துவா பிரார்த்தனை செய்தல், கிராத் ஓதல் என்பனவும் இடம்பெற்றன.

அதே சந்தர்ப்பத்தில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் பள்ளிவாயல் வளாகத்தின் அபிவிருத்திக்காக நிதி நன்கொடைகளை வழங்கினார். மேலும் சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் இராணுவத்தின் மீதான தனது தொலைநோக்குப் பார்வை குறித்து மௌலவிகளுடன் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இராணுவ முஸ்லிம் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இராணுவத்தில் சேவையாற்றும் முஸ்லிம்கள் மற்றும் சிவில் பக்தர்களும் கலந்துகொண்டனர்.

சமய வைபவத்தின் இறுதியில் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நல்லெண்ணத்தின் அடையாளமாக கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவருக்கு நினைவுச் சின்னம் ஒன்றை கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் பிரதித் தலைவரிடம் வழங்கினார்.

இதே சந்தர்ப்பத்தில், நிர்வாக சபையின் தலைவர் அல்-ஹாஜ் கலீல் மொஹமட் அவர்கள், அன்றைய பிரதம அதிதியான இராணுவத் தளபதிக்கு, நிர்வாக சபையின் சார்பாக நினைவுச் சின்னத்தை வழங்கி பாராட்டினார்.

அதேபோன்று, நிர்வாக சபை செயலாளர், நல்லெண்ணத்தின் அடையாளமாக இராணுவத் தளபதிக்கு திருக்குர்ஆனின் பிரதியை வழங்கினார். 73 வது இராணுவ ஆண்டு விழாவையொட்டி 3 வது முறையாக திங்கட்கிழமை இந்த மத நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கதிர்காமத்திலும், அநுராதபுரத்தில் ஜெயஸ்ரீ மஹா போதியிலும் கொடி ஆசீர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன.

இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டீ.ஜே கொடித்துவக்கு RWP RSP ndu , பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சீ.டீ வீரசூரிய RWP RSP ndu, பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பிரார்த்தனையின் போது உடனிருந்தனர்.