08th November 2021 13:30:24 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 65 வது படைப்பிரிவு மற்றும் 651,652 மற்றும் 653 வது பிரிகேடினரால் பொது மக்கள் மற்றும் படையினருக்கிடையிலான நல்லெண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில் பாலிநகர், துணுக்காய் மற்றும் மடு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை (4) திகதி பல நன்கொடை திட்டங்களை ஏற்பாடு செய்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 65 வது படைப்பிரிவின் கீழுள்ள 10 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணி, 19 வது இலங்கை இலேசாயுத காலாட்படையணி, 24 வது கஜபபா படையணி மற்றும் 17 வது இலங்கை இலேசாயுத காலாட்யணி படையினர்களால் அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் இந்துக் குடும்பங்களுக்கும் இலவச உணவு மற்றும் சிற்றுண்டிகளை வழங்கினர்.
65 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறியின் மேற்பார்வையின் கீழ் சிவில் விவகார அதிகாரி மற்றும் அவரது ஊழியர்களால் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.
அதன்பிரகாரம் முலங்காவில், நாச்சிக்குடா, ஆலங்குளம், இரணைமாதாநகர், சீரடிக்குளம், அம்பாள்புரம், பாலிநகர், கிரிசுட்டான் மற்றும் கல்விளான் கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள மல்லாவி மற்றும் முழங்காவில் அரச வைத்தியசாலைகளுக்கும், குறைந்த வருமானம் பெறும் இந்துக் குடும்பங்களுக்கும் 505 மதிய உணவுப் பொதிகள் படையினரால் விநியோகிக்கப்பட்டது.