01st November 2021 13:30:16 Hours
ஜனாதிபதியின் 13வது ‘கம சமக பிலிசந்தரக்’ திட்டத்தின் போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மேலும் இரண்டு புனரமைப்பு மற்றும் நிர்மாண வேலைத்திட்டங்கள் படையினரால் ஆரம்பிக்கப்பட்டன. குருணாகல் மாவட்டத்தில் மேலும் ஐந்து பாடசாலை விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னரே மேற்படி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதன்படி, கிரிபாவ கம்பளை ஆரம்பப் பாடசாலை மற்றும் இஹல மரதன்கடவல ஆரம்பப் பாடசாலை ஆகியவைகளின் விளையாட்டு மைதானங்களின் புனரமைப்பு பணிகள் பொறியியல் படையணியின் தளபதி பிரிகேடியர் அசங்க பெரேரா அவர்களின் மேற்பார்வையில் 12வது (தொ) பொறியியல் சேவை படையணி சிப்பாய்களால் 20 ஒக்டோபர் அன்று ஆரம்பிக்கப்பட்டன.
கிரிபாவ கம்பளை ஆரம்பப் பாடசாலையில் விளையாட்டு மைதானப் பனரமைப்பு பணிகளுக்கு மேலதிகமாக புதிய ஆசிரியர் குடியிருப்பு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான பணிகளும் படையினரிடம் கையளிக்கப்பட்டிருந்தன. அதன்படி இஹல மரதன்கடவல ஆரம்பப் பாடசாலையில் படையினரால் முன்னெடுக்கப்படவுள்ள ஆசிரியர் குடியிருப்பை நிர்மாணிக்கும் திட்டம் உட்பட இரண்டு திட்டங்களுக்கும் ஜனாதிபதி செயலகத்தினால் 20 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தலைமை கள பொறியியலாளர் நிஹால் அமரசேகரவின் வழிகாட்டலின் கீழ், பொறியியலாளர் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர அவர்களின் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாக திட்டத்தை நிறைவு செய்யுமாறு சிப்பாய்களுக்கு பணிப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.