19th May 2025 09:41:28 Hours
வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் கௌரவ அருண் ஹேமச்சந்திர அவர்களின் தலைமையிலான இலங்கைக் குழு, 2025 மே 13 தொடக்கம் 14 வரை ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் அமைச்சர்கள் கூட்டம் 2025 இல் பங்கேற்றது.
நான்கு பேர் கொண்ட குழுவில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, நியூயோர்க் நிரந்தர நடவடிக்கைக்கான இராணுவ ஆலோசகர் பிரிகேடியர் எஸ். விக்ரமசேகர மற்றும் பொலிஸ் அத்தியகட்சகர் திரு. ஆர்.எம். விமலரத்ன ஆகியோர் அடங்குவர்.
உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான இலங்கையின் நீடித்த அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், இலங்கை அமைதி காக்கும் படையினரின் ஒரு பெரிய குழுவை அனுப்புவதற்கு வசதியாக நம்பகமான மனித உரிமைகள் சரிபார்ப்பு பொறிமுறையை பிரதிநிதிகள் குழு முன்மொழிந்தது. கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்கு இலங்கை அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க தயாராக இருப்பதாக மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும் இலங்கையை நம்பகமான மற்றும் திறமையான பங்காளியாக அங்கீகரிக்க ஐ.நா.வை வலியுறுத்தினார்.
இலங்கை தூதுக்குழு, பிரதி அமைச்சர் மற்றும் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி தலைமையில், ஜெர்மனி, தென் கொரியா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, செக் குடியரசு மற்றும் லைபீரியா ஆகிய நாடுகளின் உயர் மட்ட அரசு மற்றும் இராணுவ பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான இருதரப்பு கலந்துரையாடல்களையும் நடாத்தியது. இந்த கலந்துரையாடல், முதன்மையாக ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல், வெளிப்படைத்தன்மை, தகவமைப்பு மற்றும் பொறுப்புக்கூறலின் உயர் தரங்களை வலியுறுத்துதல்; குறிப்பாக போர் பொறியியல் (எதிர்-மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மற்றும் வெடிபொருள் அகற்றல்), கட்டுமான பொறியியல், பாதுகாப்பு படை, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் அமைதி காக்கும் பணிகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
அமைதி காக்கும் பணிகளுக்கு மேலதிகமாக, சுற்றுலா, தொழில், தொழிற்கல்வி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற முக்கிய துறைகளில் கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை இருதரப்பு ஈடுபாடுகள் ஆராய்ந்தன. இது இலங்கையின் பரந்த வெளியுறவுக் கொள்கை இலக்குகளான நிலையான வளர்ச்சி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை பிரதிபலிக்கிறது.
இந்த உலகளாவிய உரையாடலில் தீவிரமாக பங்களிப்பதன் மூலம், சர்வதேச அமைதி காக்கும் பணியில் தனது பங்கை உயர்த்தவும், அமைதி காக்கும் படையினரின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவும், ஐ.நா. கொடியின் கீழ் பணியாற்றும் தனது படையினரின் நம்பகத்தன்மையை வலுப்படுத்தவும் இலங்கை இலக்கு வைத்துள்ளது.