06th July 2024 11:43:50 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 05 ஜூலை 2024 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.டபிள்யூ.பி. வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ மற்றும் கெமுனு ஹேவா படையணியின் நிலைய தளபதி ஆகியோர் இணைந்து வருகை தந்த இராணுவத் தளபதியை மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதிக்கு பிரதான நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் படையணி நினைவுத்தூபிக்கு மலர் வலயம் வைத்து வீரமரணமடைந்த போர்வீரர்களை நினைவுகூரும் நிகழ்வும் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதி வரவேற்புரை நிகழ்த்தியதுடன், எயார் மொபைல் பிரிகேட் தளபதியினால் அறிமுக உரை நிகழ்த்தப்பட்டது.
பின்னர், இராணுவத் தளபதி கெமுனு ஹேவா படையணி படையினருக்கு ஆற்றிய உரையின் போது அவர்களுக்கு ஊக்கமளிக்கும் கருத்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். அவரது கருத்துக்கள் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், நடத்தை மற்றும் பொறுப்புக்கூறலின் உயர்ந்த தரத்தை நிலைநிறுத்த படையினரை ஊக்குவித்தது. மேலும், சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில் இராணுவம் தொடர்பான தவறான தகவல்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தமைக்காக படையணியின் படைத் தளபதி, அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது படையணியின் படைத் தளபதி அவர்களினால் இராணுவத் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி படையணியின் பொதுநல திட்டங்கள் மற்றும் விளையாட்டுக்களை மேம்படுத்துவதற்கு நிதியுதவியினை படையணியின் படைத் தளபதியிடம் கையளித்தார். பின்னர், இராணுவத் தளபதி படையணிக்கான வருகையை அங்கீகரிக்கும் வகையில் படையணியின் படைத் தளபதிக்கு நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கினார்.
பின்னர், இராணுவத் தளபதி பிரதான நுழைவாயிலில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்ததுடன், சம்பிரதாயமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டார். விளையாட்டு மைதானத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விளையாட்டு அரங்கை திறந்து வைத்ததுடன் விஜயம் நிறைவு பெற்றது. புறப்படுவதற்கு முன், இராணுவத் தளபதி விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.