11th May 2024 07:40:01 Hours
இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையத்தில் செயற்கை கை கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் தேசத்தின் பாதுகாப்பிற்காக தியாகம் செய்தவர்களுக்கு அல்லது இயலாமை காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சியையும் காட்டுகிறது.
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு.சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஜி.டி.எச் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் ராகம ரணவிரு செவன நிலையத்தின் தளபதி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
செயற்கை கை கால்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஜெய்ப்பூர் ஸ்ரீ பகவான் மஹாவீர் விக்லாங் சஹாயதா சமிதியைச் சேர்ந்த 8 இந்தியர்களின் வள பங்களிப்போடு 3 மே 2024 அன்று தொடங்கிய இந்த பயிலரங்கம் 23 மே 2024 அன்று முடிவடைகிறது. 375 இராணுவ வீரர்கள், 25 கடற்படை வீரர்கள், 25 விமானப்படை வீரர்கள், மற்றும் 25 பொலிஸார் ஆகியோருக்கு செயற்கை கை கால்கள் விநியோகிக்கப்பட உள்ளன. மேலும், 200 பொதுமக்களுக்கும் செயற்கை கை கால்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரணவிரு சேவா நிலையத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எஸ்.யூ.எம்.என் மானகே (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் அன்றைய பிரதம அதிதியை மரியாதையுடன் வரவேற்றார். ரணவிரு சேவா அதிகார சபை தலைவரின் வரவேற்பு உரையைத் தொடர்ந்து, கௌரவ அதிதிகளால் மங்கல விளக்கு ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் தனது உரையில் 2010 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இதேபோன்ற திட்டங்களில் தனது ஈடுபாடு மற்றும் பல ஆண்டுகளாக ஊனமுற்ற இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகளை நினைவுப்படுத்தினார்.
பிரதம அதிதி தனது உரையில், மூன்று தசாப்த கால யுத்தத்தின் போது முப்படையினரின் தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புகளை நினைவுகூர்ந்தார். மேலும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியதுடன், எதிர்காலத்தில் தேசத்தைப் பாதுகாப்பதற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உறுதியளித்தார்.
நடைபெற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தகுதியான 4 இராணுவ வீரர்களுக்கு செயற்கை கால்கள் அடையாளமா வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.