Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th April 2024 20:11:55 Hours

இராணுவத் தலைமையகத்தில் தேசிய தொழிற்கல்வித் தகுதி பெற்ற படையினருக்கு சான்றிதழ்கள்

ரணவிரு வள நிலையத்தில் பல்வேறு தொழில்நுட்ப பாடநெறிகளில் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழிற்கல்வி நிலை 04 இனை வெற்றிகரமாக நிறைவு செய்த படையினருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 29) காலை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் இணைந்து பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

வளாகத்திற்கு வந்தடைந்த பிரதம அதிதியை இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ மற்றும் ரணவிரு வள நிலையத்தின் தளபதி பிரிகேடியர் பீஎன் விஜேசிறிவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர் வரவேற்றனர். அத்துடன் உயிர்நீத்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ரணவிரு வள நிலைய தளபதி தனது உரையில் பங்கேற்பாளர்களை வரவேற்றார்.

பின்னர், ஹெகித்தவில் இராணுவத்தால் நடத்தப்படும் ரணவிரு வள நிலையத்தின் சாதனைகளை வெளிப்படுத்தும் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது, இதில் தச்சு (கட்டிட கலை) பாடநெறி, இலத்திரனியல் உபகரணங்கள் தொழில்நுட்ப பாடநெறி, முடி மற்றும் அழகுக்கலைப் பாடநெறி, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பழுதுபார்த்தல், கணினி வன்பொருள் பாடநெறி, அலுமினியம் ஒட்டுதல் பாடநெறி, நில வடிவமைப்பு தொழில்நுட்பவியலாளர் பாடநெறி மற்றும் கணினி மென்பொருள் உதவியாளர் பாடநெறி ஆகிய பாடநெறிகள் முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை பணியாளர்களுக்காக நடாத்தபட்டவை உள்ளடங்கியிருந்தது.

சான்றிதழ் வழங்கும் அமர்வின் போது, இராணுவத் தளபதி மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.ஈ.பீ வீரசிங்க (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட 167 பங்கேற்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 18 பங்கேற்பாளர்களுக்கு அடையாளமாக சான்றிதழ்களை வழங்கினர்.

இவ்விழாவின் போது, முடி மற்றும் அழகுக்கலைப் பாடநெறியின் பங்கேற்பாளர்கள் மணப்பெண்களுக்கான அலங்கார காட்சியைக் காட்சிப்படுத்தினர், மேலும் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் திருத்தும் பாடநெறியின் பங்கேற்பாளர்கள் மோட்டார் சைக்கிள் ஒன்றின் பாகங்களை முலுமையாக பொருத்திக் காட்டினர். சில அழகியல் நிகழ்வுகள் இந்த விழாவிற்கு வண்ணம் சேர்த்தன.

நிகழ்ச்சி முடிவில், நிறுவனங்களிடையே நீடித்து வரும் நல்லெண்ணத்தின் அடையாளமாக, பாராட்டுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, நிதி முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.