18th May 2023 22:37:13 Hours
மேற்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் 61 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 613 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோர்களின் மேற்பார்வையில் மாத்தறை மாவட்ட கொட்டபொல பிரதேச செயலக பொருப்பிட்டிய கிராம அலுவலர் பிரிவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் படையினரால் ஞாயிற்றுக்கிழமை (மே 14) உணவு வழங்கப்பட்டது.
அதற்கமைய (மே 15) மழை மற்றும் வெள்ள பெருக்கு அதிகரிக்கத் தொடங்கியதால் நிவாரணப் பணிகள் மேலும் தொடந்தன. 2 அதிகாரிகள் உட்பட 12 படையினர், ஒரு டிரக் வண்டி மற்றும் ஒரு டிரக்டருடன் மருத்துவ படையினரை அப் பகுதி நோயாளர்களுக்கு பணிகளைச் செய்வதற்கு அனுப்பப்பட்டனர்.
இதற்கிடையில், கம்புறுப்பிட்டி பிரதேச செயலகப் பிரிவின் கம்புருப்பிட்டி முலட்டியான வீதி பல இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியிருந்ததால், 613 வது காலாட் பிரிகேட் தளபதியிடம் கம்புருப்பிட்டி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, படையினர் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்ப முடியாத நோயாளர்களுக்கு இராணுவ ட்ரக் மற்றும் டிரக்டர்களில் வசதிகளை செய்து கொடுத்தனர்.
அந்தபான - களுகெதர பிரதேசம் நீரில் மூழ்கியதால், பிரேதத்தை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு இராணுவத்தின் உதவியை கோரியதை தொடர்ந்து, 613 வது காலாட் பிரிகேட்டில் இருந்து ஒரு இராணுவ டிரக் மற்றும் ஒரு டிரக்டர் அனுப்பப்பட்டது. இறுதியாக 10 படையினர் பிரேதத்துடன் மயானத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் எடுத்துச் சென்றனர்.
மேலும், பஹலக்கடை கொரபுவன, கொரபுவன ரன்சகொட பிரதேசத்தில் காலம் சென்ற 85 வயதுடைய ஆண் ஒருவரின் சடலத்தை எடுத்துச் செல்வதற்காக 12 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் படகு மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். காலம் சென்றவரை கொண்டு சென்ற படையினர் அவரின் உறவினர்களுக்கு இறுதி கிரியை மயானத்தில் நடாத்துவதற்கு உதவினர்.
மேலும், பஸ்கொட பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மாவரல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அதோலுவ பிரதேசத்தில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் அங்கு வசிக்கும் நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போன நபரைத் தேடுவதற்காக, 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் ஒரு அதிகாரியும் 15 படையினரும் 15 மே 2023 அன்று காலை தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், மாத்தறை மாவட்டத்தின் மாலிம்படை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கடுவை - கம்புராப்பிட்டிய வீதியில் உள்ள பி13 அணைக்கட்டு நிரம்பி வழியும் நிலையில், 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணியின் 20 படையினர், 2023 மே 15 அன்று பி13 அணைக்கட்டுக்கு மணல் மூட்டைகளை அடுக்கினர். மாத்தறை மாவட்ட செயலகத்தினால் வெள்ள அனர்த்தம் மற்றும் பாரிய கசிவு ஏற்படுவதற்கு முன்னர் அதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, 61 வது காலாட் படைப்பிரிவு தளபதி, 613 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் குறித்த பகுதிகளில் கட்டளை அதிகாரிகள், அந்த அவசர நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து படையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினர்.