04th August 2023 01:00:36 Hours
வடக்கு மற்றும் கிழக்கில் வீடற்றவர்களின் நலனுக்காக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டங்களில் ஒன்றாக முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் 682 காலாட் பிரிகேடின் 3 (தொ) விஜயபாகு காலாட் படையினர் புதுக்குடியிருப்பில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணித்து, திங்கட்கிழமை (ஜூலை 31) நடைபெற்ற நிகழ்வின் போது பயனாளியிடம் கையளித்தனர்.
மண்டுவிலை சேர்ந்த திரு கே சாந்தா, திரு எம் சுமன், ஆனந்தபுரம் திரு எஸ் புனிதவலன் மற்றும் வாழைமடத்தில் வசிக்கும் திரு எம் பி என்டன் ஆகியோர் இணைந்து இராணுவத்திற்கு 2 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கினர். படையினர் தங்களது தொழிநுட்ப மற்றும் மனித வளத்துடன் வீட்டைக் கட்டி முடித்தனர்.
முன்று மாத கைக்குழந்தையின் தந்தையான திரு.தியாகராஜா நிரந்தர வருமானம் இல்லாமல் குடும்பத்துடன் தகரத்தாள் மூடப்பட்ட வீட்டில் வாழ்ந்து வந்தார். இவர்களுக்குப் புதிய வீடொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு இராணுவத்தின் உதவியை நாடும் நோக்கத்துடன் பிரதேசத்தில் உள்ள கிராம உத்தியோகத்தர் அவர்களின் அவல நிலையை 68 வது காலாட் படைப்பிரிவு படையினரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஆகியோரின் வழிகாட்டுதல்களுக்கமைய 682 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி அவர்களி்ன் மேற்பார்வையில் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
68 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அழைப்பின் பேரில் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி பயனாளிகளிடம் அடையாளமாக புதிய வீட்டின் சாவிகளை கையளித்தார். அதே விழாவில் அன்றைய பிரதம விருந்தினர் வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார்.
682 வது பிரிகேட் தளபதி, 3 (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அனுசரணையாளர்கள், பிரதேசத்திலுள்ள அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.