08th January 2024 18:18:42 Hours
51 வது காலாட் படைப்பிரிவானது இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையுடனான கூட்டு நடவடிக்கையான ‘சீகல்’ பயிற்சிக்கு தயாராகும் வகையில் வடக்கு கடற்படைப் பகுதியில் நீர்நிலை நடவடிக்கை பயிற்சியை அண்மையில் நிறைவு செய்தது. மண்டைதீவுக்கு தெற்கே அமைந்துள்ள பாலைத்தீவில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது.
2024 ஜனவரி 04 முதல் 06 வரை நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியானது, கடற்படைக் கப்பல்கள் மற்றும் கடல் நிலைமைகள் குறித்து இராணுவத் படையினருக்கு பரிச்சயப்படுத்தி, இறுதிப் பயிற்சிக்கு அவர்களைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 51 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 40 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் 353 சிப்பாய்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.
இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் காங்கேசன்துறையில் உள்ள வடக்கு கடற்படை தலைமை பகுதியிலும், ஊர்காவற்துறையில் உள்ள இலங்கை கடற்படை முகாமான கஞ்சதேவாவிலும் இந்த பயிற்சி நடைபெற்றது. 2024 ஜனவரி 11 ஆம் திகதி பாலைத்தீவு நீர் தாக்குதலை உள்ளடக்கிய ‘சீகல்’ பயிற்சி ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியானது இலங்கை ஆயுதப் படைகளுக்கு அவர்களின் நீர்பயிற்சி திறன்களை சோதித்து மேம்படுத்துவதற்கு ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை வழங்குகிறது.