Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th August 2022 10:55:03 Hours

யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் புலோலியில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு புதிய வீடு நிர்மாணிப்பு

நன்கொடையாளர் ஒருவரின் அனுசரணையின் மூலம் யாழ். புலோலி பகுதியில் வசிக்கும் முன்னாள் விடுதலை புலி போராளிகளின் குடும்பமொன்றுக்கு, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது படைப் பிரிவு படையினர் புதிய வீடொன்றை நிர்மாணித்து அதனை கையளித்தனர். இராணுவத்தின் மனிதவளம் மற்றும் தொழிநுட்ப நிபுணத்துவத்தை பயன்படுத்தி இவ்வீட்டின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் குடாநாட்டில் சேவையாற்றும் படையினரை சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் முன்னிலையில் பயனாளிகளுக்கு வீட்டின் சாவி வழங்கப்பட்டது.

குடாநாட்டை தளமாகக் கொண்ட நன்கொடையாளர் திரு விஷ் நடராஜாவினால் இராணுவத்திற்கு வழங்கப்பட்ட நிதியுதவியில் இராணுவத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய வீட்டின் ஆரம்ப திறப்பு வழா நிகழ்வு வெள்ளிக்கிழமை (26) நண்பகல் இந்து சமய சடங்குகளுக்கு மத்தியில் இடம்பெற்றது.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி கலந்து கொண்டதுடன் பயனாளிகளுக்கு புதிய வீட்டின் சாவியை வழங்கிவைத்தார். 55 வது படைப்பிரிவின் கீழுள்ள 551 வது பிரிகேடின் 16 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் தானாக முன்வந்து, குறுகிய காலத்திற்குள் வீட்டை நிர்மாணிப்பதற்கான தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் மனிதவள உதவிகளை வழங்கினர்.

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பில் போராளிகளாக பணியாற்றிய பயனாளிகளான கணவன் மனைவி இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி, சரணடைந்ததுடன் அவர்கள் குணமடைந்த பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டனர். தற்போது, பயனாளியின் கணவர் தற்போது கொங்கிரீட் தயாரிக்கும் இடத்தில் கூலி வேலை செய்து வருகிறார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு அவர்களின் அவலநிலை குறித்து தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த வீட்டை நிர்மாணிப்பதற்கான அனுசரணையை பெற்று இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வருகை தந்த பிரதம அதிதியை வரவேற்ற வீட்டின் பயனாளியான திருமதி தங்கராசா தர்மராணி, அவரது கணவர் திரு குமாரகுலசிங்கம் பிரசாந்தன் மற்றும் அவர்களது புதல்வர் ஆகியோர், வீடு கையளிக்கும் விழாவில் வீட்டுக்கான சாவியைப் பெற்றுக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து இராணுவத் தளபதி மூவரைக் கொண்ட அவர்களின் குடும்பத்திற்கு பண நன்கொடையை வழங்கி அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதே இடத்தில், மனிதாபிமான அடிப்படையில், இராணுவத் தளபதியினால், அண்மையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய மூன்று தகுதியான மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000/= புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. அவர்கள் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை இந்த புலமைப்பரிசில் வழங்கப்படும். இதற்கான அனுசரணையை அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த கலாநிதி பியசேன கமகே அவர்கள் வழங்கியுள்ளார்.

மேலும், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் இராணுவத்தின் அனுசரணையுடன் அதே இடத்தில் வழங்கப்பட்டன. இதன் போது இராணுவத் தளபதியுடன் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் இணைந்து விநியோகம் செய்தார்.