Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th September 2021 22:58:59 Hours

மொஸ்கோவின் ‘இராணுவ விளையாட்டு -2021’ இல் ‘சிறந்த அணிக்கான கிராண்ட் பிரிக்ஸ்’ விருது இராணுவ கலைஞர்களுக்கு

முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட மொஸ்கோவின் 'VII சர்வதேச இராணுவ விளையாட்டு -2021' போட்டிகளின் கலாசார பிரிவின் சிறப்பான அணிக்கான விருது மற்றும் சிறந்த குழுவிற்கான கிராண்ட் பிரிக்ஸ் விருது உட்பட பல விருதுகளை இலங்கை இராணுவ நடனக் கலைஞர்களின் குழுவினர் பெற்றுக்கொண்டனர். அதற்கமைய வெளிப்படைத் தன்மையான மற்றும் உண்மைத் தன்மை கொண்ட மேடைப் படங்கள் மற்றும் அவற்றின் கலாசார பிரதிபலிப்பு என்பவற்றில் சிறந்த அணிக்கான விருதையும், வாத்திய போட்டிகளில் (டூயட்) முதலிடத்தையும், கலாச்சார ஆடைக்காக இரண்டாமிடத்தையும் பெற்றுகொண்டனர்.

இவ்வருடத்திற்கான 'VII சர்வதேச இராணுவ விளையாட்டுகள்' ஓகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 4 வரை ஒரே நேரத்தில் ரஷ்ய ஒன்றியத்தின் 23 பயிற்சி மைதானங்களில் நடத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் தொழில்முறை கலைஞர்கள், படைப்பாற்றல் திறன்கொண்ட குழுக்களை கவரும் வகையிலான 'இராணுவ கலாச்சார” வகை நிகழ்வுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அத்தோடு, முதல்முறையாக இடம்பெற்ற மேற்படி போட்டிகளில் 46 நாடுகளைச் சேர்ந்த இராணுவ கலாச்சார மையங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

அத்தோடு சனிக்கிழமை (4) மாலை நடைபெற்ற இறுதி நாள் நிகழ்வில் ரஷ்ய இராணுவக் குழுவுடன் இணைந்து இலங்கை இராணுவ நடனக் குழு அரங்கேற்றிய நிகழ்வில் இலங்கை இராணுவ நடனக்குழு பிரத்தியேகமாக தெரிவு செய்யப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும். அத்துடன் இராணுவ நடனக் கலைஞர்கள் நடனப் போட்டியில் (டூயட்) 3 வது இடத்தையும், பாடல் போட்டியில் (ரஷ்ய பாடல்) 3 வது இடம் மற்றும் சிறந்த காணொலிக்காக 3 வது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணி சார்பில் 3 அதிகாரிகள் மற்றும் 9 சிப்பாய்கள் மேற்படி நிகழ்வில் பங்கேற்றனர். இந்நிகழ்வில் இராணுவ வாத்திய இசை மற்றும் நடனக்கலை பணிப்பாளர் பிரிகேடியர் ரோஹன பெஞ்சமின் அவர்களும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்போது உலகின் 46 நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் மற்றும் பிற கலைஞர்களை வியக்க வைக்கும் வகையில் மேற்கத்திய நடன அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டதோடு, அவற்றுக்குரிய வாத்திய இசைகளுடன், மலை நாட்டு, தெற்கு மற்றும் சப்ரகமுவ பாரம்பரியங்களை உள்ளடக்கிய நடன நிகழ்ச்சிகள் ஒருங்கிணைந்த குழுக்களினால் நிகழ்த்தக்கட்டன.

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பில் ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற மேற்படி போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது.

மொஸ்கோவில் நடைபெற்ற இராணுவ விளையாட்டுக்கள் -2019 இல் இலங்கை இராணுவ கலாச்சார அணி பங்குபற்றியிருந்ததுடன் இராணுவ விளையாட்டுகளின் கூட்டமைப்பில் நடைபெற்ற படைப்பாற்றல் போட்டியில் மூன்று இராணுவ கலைஞர்கள் சிறந்த நடனக் கலைஞராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஆனால் இவ் வருடத்திற்கான 'VII சர்வதேச இராணுவ விளையாட்டு -2021' இல் புதிய வகைய 'இராணுவ கலாசார' நிகழ்வுகள் அறிமுகப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.