29th April 2025 21:52:42 Hours
சமீபத்திய பேரழிவு நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசர நடவடிக்கைகளுக்காக மியான்மருக்கு அனுப்பப்பட்ட முப்படை மனிதாபிமான நிவாரணக் குழு, தனது பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர் இன்று (ஏப்ரல் 26, 2025) இலங்கைக்கு நாடு திரும்பியது.
திரும்பிய குழுவினரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் அன்புடன் வரவேற்றார்.
பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக, அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் உத்தரவை பின்பற்றி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த பணியாளர்களைக் கொண்ட சிறப்பு முப்படைக் குழு, 2025 ஏப்ரல் 5 ஆம் திகதி மியான்மருக்குப் புறப்பட்டது.
மியான்மரை அடைந்ததும், நிவாரணப் பணிகளைத் தொடங்குவதற்காக, யாங்கோனில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நே பிய் தாவ் மாகாணத்திற்கு குழு விரைவாக அனுப்பப்பட்டது. நில நடுக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான போப்பா திரி நகரில் பேரிடர் நிவாரணப் பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இடம்பெயர்ந்த நபர்களின் துன்பத்தைத் தணிக்கும் முயற்சியில், அவசர சுகாதார சேவைகளை வழங்குவதற்காக குழு நடமாடும் மருத்துவமனை சேவையை வழங்கியது. இந்த மருத்துவமனைகள் காயங்களுக்கு சிகிச்சை, நோய் தடுப்பு மற்றும் தற்காலிக தங்குமிடங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் பிள்ளைகள் உட்பட பாதிக்கப்படக்கூடிய அனைவருக்கும் மருத்துவ உதவியை வழங்கியது.