16th August 2021 21:13:24 Hours
பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் இணைந்து விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கு பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீதி தடைகளில் பணியமர்த்தப்படவுள்ளனர்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களின் ஆலோசணைக்கு அமைவாக மேல் மாகாணத்திலிருந்து மத்திய மாகாண எல்லையைக் கடக்கும் இடங்களைத் தேர்ந்தெடுத்து, அதற்கேற்ப வீதித் தடைகள் போடப்பட்டுள்ளன. மேலும் பயணக் கட்டுப்பாடுகளை மீறி மாகாணங்களைக் கடக்க முயற்சிக்கும் வாகனங்களைத் தடுக்க அல்லது கைது செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நடைமுறைக்கு வரும் இத்தகைய கட்டுப்பாடுகளை மீறி, இடைச்சாலை வழியாக நுழைய முயலும் வாகனங்கள் கைது செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும்.
அந்த வீதித் தடைகளில் ஒரு மாகாணத்தில் இருந்து இன்னொரு மாகாணத்திற்குள் நுழைய மற்றும் வெளியேறுபவர்களை முழுமையாகச் பரிசோதிக்கப்பட்டு கொவிட் -19 கட்டுப்பாடு குறித்த ஜனாதிபதி பணிக்குழுவின் "அத்தியாவசிய சேவைகள்" வகைக்குள் வந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. சேவைத் தேவைகள், சுகாதாரப் பணியாளர்கள், அரச ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் தொடர்புடைய மற்றவர்கள் தங்கள் தொழில் வழங்குனர்களின் தேவை அடிப்படையில் அழைக்கப்பட்டவர்களுக்கும் இவ்வாறு மாகாணங்களுக்கு இடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
பாதுகாப்பு படைகளின் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள், கடமைகளுக்கு ஒருவரை அழைக்கும் எழுத்துப்பூர்வ ஆவணங்கள், இலத்திரனியல் ஆவணங்கள் அல்லது அந்தச் வீதி சோதணை சாவடிகளில் மாகாணங்களுக்கிடையே பயணம் செய்வதற்கான தகுதிக்கான வேறு ஏதேனும் சான்று ஆகியவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது.