09th April 2023 20:00:49 Hours
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 வது காலாட் படைபிரிவின் 593 வது காலாட் பிரிகேட் படையினரால் பெருமளவிலான உலர் உணவுகள் மற்றும் உணவுப் பொருட்களை இலவசமாக விநியோகிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வியாழன் (ஏப்ரல் 6) முல்லைத்தீவு பகுதியில் வசிக்கும் 200 ஆதரவற்ற குடும்பங்களை வேப்பமர சந்தியில் உள்ள 19 வது கெமுனு ஹேவா படையணி முகாம் வளாகத்திற்கு வரவழைத்து இவ் வினியோக திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வெளிநாடுகளில் உள்ள அனுசரனையாளர்களின் ஆதரவுடன் இந்த நிகழ்வுக்கான நிதியுதவியை வண.நாகலகமுவ சுமண தேரர் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. 59 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ரணசிங்க மற்றும் 593 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் சிந்தக விஜேநாயக்க ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் 5 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 19 வது கெமுனு ஹேவா படையணியின் படையினர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நன்கொடை வழங்கினார். ஒவ்வொருவருக்கும் தலா 5000/= ரூபா பெறுமதியான பருப்பு, அரிசி, உருளைக்கிழங்கு, வெங்காயம், மிளகாய்த்தூள், உட்பட உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் கொக்கிளாய் ஸ்ரீ சம்போதி விகாரையின் பிரதமகுரு வண. திஸ்புர ஸ்ரீ குணரத்ன தேரர், நன்கொடையாளர் குழுவின் பிரதிநிதிகள் திரு.சுனில் விஜேவர்தன, திரு. மஹிந்த சுபசிங்க மற்றும் திரு. சம்மி சுமேத, 59 வது காலாட் படைபிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அழைப்பாளர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.