18th August 2023 21:36:20 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இராணுவ சேவை வனிதையர் பிரிவானது சிபிஎல் நிறுவனத்துடன் இணைந்து 'விருளியஹாரஸார' எனும் தொனிப்பொருளின் கீழ் சமையல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந் நிகழ்ச்சி பெண் அதிகாரிகள், பெண் சிப்பாய்கள் மற்றும் சேவைப் பணியாளர்களின் வாழ்க்கைத் துணைவியரின் சமையல் திறன் பற்றிய அறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்நிகழ்வு வியாழக்கிழமை (ஓகஸ்ட் 17) இலங்கை இலேசாயுத காலாட் படையணி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக வருகை தந்த இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அவர்களை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி அபேசேகர அவர்கள் நுழைவாயிலில் வரவேற்றதுடன் அன்றைய நிகழ்வு ஆரம்பமாகியது.
சம்பிரதாயங்களுக்கு இணங்க, மங்கள விளக்கேற்றி சேவை வனிதையர் கீதம் இசைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகியதுடன், வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் பங்கு பற்றிய காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது.
சிபிஎல் நிறுவனத்தின் உணவுக் குழுமப் பிரிவின் பொது முகாமையாளர் திரு. சசி பெர்னாண்டோ அவர்கள் பட்டறையின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்தி சமையல் பட்டறையை ஆரம்பித்து வைத்ததுடன் இந் நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பட்டறையின் போது பங்குபற்றிய அனைவருக்கும் சிபிஎல் உணவுக் குழு தயாரிப்புகள் அடங்கிய பரிசுப் பொதிகளை இராணுவ சேவை வனிதையர் பிரிவு வழங்கியது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் சிபிஎல் உணவு கிளஸ்டர் பிரிவின் முகாமையாளர் ஆகியோரால் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி அனைவருக்கும் நன்றி கூறியதுடன், அன்றைய தினத்தின் நினைவுச் சின்னமாக குழு படமும் எடுத்துக் கொண்டதுடன், அனைத்து தரப்பினருக்குமான தேநீர் விருந்தும் வழங்கப்பட்டது.