23rd April 2025 08:03:11 Hours
கொரியக் குடியரசு கடற்படையின் போர்க் கப்பலான ‘காங் காம் சான்’ இன்று (ஏப்ரல் 22) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தபோது, அதற்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இக் கப்பல் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான கொரிய குடியரசின் தூதுவர் கௌரவ மியோன் லீ அவர்களும் கலந்து கொண்டார்.
கப்பலின் கட்டளை அதிகாரி மற்றும் கொரிய தூதுவர் ஆகியோருடன் பிரதி அமைச்சர் கப்பலை பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து நடந்த கலந்துரையாடலின் போது, இந்தக் கப்பலின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவில் ஒரு மைல்கல்லாக இருப்பதாகவும் இது கடற்படை ஒத்துழைப்பின் வலிமையை மட்டுமல்ல, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான இரு நாடுகளின் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் இளைஞர் மேம்பாட்டிற்கு கொரியாவின் பங்களிப்புகளையும் பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார். இலங்கையர்களின் தொழில் திறன்கள் மற்றும் மொழிப் புலமையை ஊக்குவிக்க கொரிய குடியரசு ஆற்றிய முக்கிய பங்கை அவர் பாராட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நீண்டகால உறவுகளை பாராட்டிய கொரிய தூதுவர், இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிகழ்வில் முப்படை தளபதிகள், இராஜதந்திரிகள், மற்றும் கொரிய தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
(படம் மற்றும் கட்டுரை : www.defence.lk)