Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2022 18:17:24 Hours

இராணுவ வீடமைப்புத் திட்டத்தின் 7 வது கட்டமாக மேலும் 48 போர் வீரர்களுக்கு நிதி உதவிகள்

இலங்கை இராணுவத்தின் உயிரிழந்த போர்வீரர்கள், காயமடைந்த போர்வீரர்கள், ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் இருக்கும் இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துகொள்வதற்கான வீடமைப்பு திட்டத்தின் 7வது கட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கும் நிகழ்வு இன்று (14) காலை இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது 48 பேருக்கு முழுமையான வீடுகளை நிர்மாணித்துகொள்வதற்கும் பகுதியளவில் வீடுகளை நிர்மாணித்துகொள்வதற்குமான நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

படையினருக்கான நலன்புரிச் செயற்பாடுகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உதவித் தொகைகளை வழங்கி வைத்தார். சிரேஷ்ட அதிகாரிகள் பலரது பங்கேற்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் 11 முழுமையான வீடுகளும் 37 வீடுகளை பகுதியளவில் கட்டமைப்பதற்குமான நிதி உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வின் போது போரில் வீர மரணம் எய்திய 9 வீரர்களின் குடும்பத்தினரும் காயமடைந்த 12 வீரர்களின் குடும்பத்தினரும், 03 ஓய்வுபெற்ற போர் வீரர்களின் குடும்பத்தினரும் சேவையிலிருக்கும் 24 இராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.

படைவீரர் விவகார பணிப்பகம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பகம் மற்றும் பயனாளிகளின் படையணித் தலைமையகங்கள் ஆகியன ஒன்றிணைந்து முன்னெடுக்கும் இத்திட்டத்தில் முழுமையாக புதிய வீடொன்றை நிர்மாணித்துகொள்ள 1.5 மில்லியன் ரூபாய்களும் பகுதியளவில் வீடுகளை நிர்மாணிப்பதற்கான 750,000 ரூபாயும் வழங்கப்பட்டது. இராணுவத்தின் மேற்படி சிறப்புத் திட்டமான ரணவிரு நிவாச திட்டத்திற்கான நிதியத்தை போஷிப்பதற்காக படையினரால் ஒவ்வொரு மாதமும் இராணுவ அதிகாரிகள் தங்களது சம்பளத்தில் 50 ரூபாவினையும் சிப்பாய்கள் 10 ரூபாயினையும் அர்பணிப்புச் செய்கின்றனர். மேலும் முழுமையான வீடுகளை நிர்மாணித்துகொள்வோருக்கு அவர்களின் படையணியினரால் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவி தொகையை வழங்கிவைத்ததோடு நிகழ்வில் புனர்வாழ்வு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் ஷிரோன் ஏக்கநாயக்க வரவேற்புரை நிகழ்த்தியதை தொடர்ந்து கடந்த ஆறு கட்டங்களாக எவ்வாறு இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது என்றும் தற்போதைய வலுவான நிலையை இத்திட்டம் எவ்வாறு அடைந்துள்ளது எனவும் எதிர்காலத்தில் இத்திட்டம் எவ்வண்ணம் முன்னெடுக்கப்பட உள்ளதெனவும் விளக்கமளிப்பதற்கான வீடியோ காட்டியொன்றும் ஔிபரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது வரையில் இத்திட்டத்தின் கீழ் 244 முழுமையான வீடுகளை நிறுவதற்கும் 24 பகுதியளவான வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதோடு, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் விகும் லியனகே உள்ளிட்ட பல சிரேஷ்ட அதிகாரிகள் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டனர்.