01st November 2024 15:39:09 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் மைட்லேண்ட் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நலன்புரி வசதி வளாகத்தை 30 ஒக்டோபர் 2024 அன்று திறந்து வைத்தார். இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் பல பெண் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த வளாகமானது, இலங்கை இராணுவ அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் நலன்புரி வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு உணவகங்கள், விருந்து மண்டபம், சொகுசு அறைகள் மற்றும் தரைத்தள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. பல்வேறு உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கான சிறந்த இடமாகவும் இது செயல்படுவதுடன், இது போன்ற செயற்பாடுகளை வேறு இடங்களில் நடாத்துவதற்கான செலவுகளைக் குறைக்கவும் இத்திட்டம் உதவும்.
இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களுடன் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஎஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ ஆகியோர் இணைந்து பிரதம அதிதியை மரியதையுடன் வரவேற்றதுடன், நிகழ்வுகள் ஆரம்பமாகின. மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இராணுவத் தளபதி நாடா வெட்டி பதாகையை திரைநீக்கம் செய்து இந்த வசதியை திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி மற்றும் ஏனைய சிறப்பு விருந்தினர்கள் மங்கள விளக்கை ஏற்றிவைத்து புதிய வளாகத்தை பார்வையிட்டனர். இராணுவத் தளபதி தனது உரையில், இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த அனைத்து கடந்த கால தளபதிகளுக்கும், இத்திட்டத்தை வெற்றியடைய கடுமையாக உழைத்த சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், பொறியியல் சேவைகள் பணிப்பாளர் மற்றும் கட்டுமான குழுவினரின் அர்ப்பணிப்புடைய முயற்சிகளை பாராட்டினார். பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் வழிகாட்டுதலின் கீழ் 6 வது பொறியியல் சேவைகள் படையணி கட்டுமானத்திற்கான பணியாளர் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்கியது.
பின்னர், தேநீர் விருந்தின் போது இராணுவத் தளபதி படையினருடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் குழுப்படங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
முதன்மை பணிநிலை அதிகாரிகள், இராணுவ வழங்கல் கட்டளை தளபதி, மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, இராணுவத் தலைமையகத்தின் பொறியியலாளர் சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.