01st October 2021 18:45:08 Hours
இராணுவத்தின் 72 வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (30) காலை கொள்ளுபிட்டி ஜும்மா பள்ளிவாசலில் இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இஸ்லாமிய மத முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இராணுவத்திற்கு ஆசி வேண்டி சிறப்பு இஸ்லாமிய மத வழிபாடுகள் இடம்பெற்றன.
பிரதம விருந்தினராக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் மொஹமட் கலீல், செயலாளர் மற்றும் கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளி வாசல் அறங்காவலர் சபையின் உறுப்பினர்கள் இராணுவ முஸ்லீம் சங்க தலைவர் பிரிகேடியர் அஷ்கர் முத்தலிப் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளுடன் இணைந்து அன்புடன் வரவேற்றனர்.
அதனையடுத்து இடம்பெற்ற மும்மொழி வரவேற்புரைகளுடன் பிரார்த்தனை நிகழ்வின் முக்கியத்துவம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன. சில வினாடிகளுக்கு பின்னர் இஸ்லாமிய மத மரபுகளுக்கமைய அலங்கரிக்கப்பட்ட புனித பகுதியில் வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.
நாட்டின் நலன்களுக்காக இராணுவத்தின் சேவைகளைப் பாராட்டி இஸ்லாமிய மத பிரசங்கமான ‘பயான்’ பின்னர் இராணுவக் கொடிக்கு ஆசீர்வாதம் வழங்கல், மௌலவி ஏ.பி.எம். ரிஸ்வான் கிராத் ஓதல் மற்றும் மௌலவி அம்ஹர் ஹக்கீம்தீன் ‘துவா’ பிரார்த்தனை செய்தல் என்பன இடம்பெற்றன.
அதே சந்தர்ப்பத்தில், கொள்ளுப்பிட்டிய ஜும்மா பள்ளி வாசல் அறங்காவல் சபை உபத் தலைவர் அல்-ஹஜ் முஸ்லீம் சலாஹுதீன் அறங்காவலர் சபை சார்பாக இராணுவத் தளபதிக்கு சிறப்பு பாராட்டு நினைவு பரிசை வழங்கினார். இதேபோல், அறங்காவலர் சபையின் செயலாளர் அல்-ஹஜ் ஐ.எஸ் ஹமீத் புனித அல் குர்ஆனின் நகலை இராணுவத் தளபதிக்கு நல்லெண்ணத்தின் அடையாளமாக வழங்கினார்.
சிறப்பு இஸ்லாமிய மத பிரார்த்தனைகளின் பின்னர் ஜெனரல் ஷவேந்திர சில்வா நினைவு சின்னம் மற்றும் புனித வளாகத்தின் வளர்ச்சிக்கு நிதி நன்கொடை வழங்கினார். மேலும் நாட்டில் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கம் குறித்து மௌலவியுடன் எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்.
இராணுவ முஸ்லீம் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, இராணுவ பிரதி நிலை பிரதானியும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, சிரேஸ்ட அதிகாரிகள் இராணுவத்தின் முஸ்லீம் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை 72 வது இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த 2 வது மத வழிபாட்டு நிகழ்வுகளுக்கு முன்னதாக திங்கட்கிழமை (27), கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் முதல் கொடி ஆசிர்வாத நிகழ்வு நடைபெற்றது.