16th September 2023 22:21:09 Hours
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை இராணுவம் அனைத்து பகுதிகளிலும் 10 நிகழ்நிலை மற்றும் 15 நேரடி மையங்களுடாக இதுவரை மேற்கொண்ட சாரதி அனுமதிப்பத்திர அச்சிடும் அனைத்து பொறுப்புகளையும் மீள ஒப்படைத்துள்ளது.
2020 ஜூலை 9 அன்று அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, 10 நிகழ்நிலை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் மையங்கள் மற்றும் 15 நேரடி மையங்களை மேற்பார்வையிட்டு நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் மையங்களின் செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இராணுவம் பொறுப்பேற்றதுடன் இராணுவ தகவல் தொழில்நுட்ப தீர்வு மையத்தின் கீழ் 2021 ஜனவரி 1 அன்று ஆணையை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்திய பிறகு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்தை அமுல்படுத்தியலிருந்து இலங்கை இராணுவம் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையின் செயல்திறனை அதிகரித்துடன் செலவுகளை குறைப்பதில் கணிசமான முன்னேற்றங்களைச் செய்துள்ளது.
இன்றுவரை இராணுவம் 1,022,763 சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 1,411,704 தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளடங்களாக 2,434,467 சாரதி அனுமதிப்பத்திரங்கள் வெற்றிகரமாக அச்சிட்டுள்ளது. அவர்களின் விடாமுயற்சியின் விளைவாக இலங்கை அரசாங்கத்தின் 2021 ஜனவரி 1 க்கு முந்தைய செலவுகளுடன் ஒப்பிடும்போது ரூ.810,799,495.90 மீதப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம் பிரதான பொறுப்புக்கு மேலதிகமாக சாரதி அனுமதிப்பத்திர முறைமை மற்றும் அது தொடர்பான சேவைகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு துணை முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. அச்சிடப்பட்ட அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குவதற்கான "ஸ்பீட் போஸ்ட்" சேவைகளை வழங்குவதற்காக தபால் திணைக்களத்துடன் இணைந்து வெரஹெர மற்றும் நாரஹேன்பிட்டி தரவு மையங்களில் சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பை நடைமுறைப்படுத்துதல் மற்றும் இலங்கை டெலிகாம்முடன் இணைந்து அவசரகாலங்களில் கணினியின் பின்னடைவு அனர்த்த மீட்பு மையத்தை நிறுவுதல் ஆகியவற்றிக்கு பங்களித்துள்ளது.
மேலும் அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான செலவு குறைந்த மென்பொருள் அமைப்பை உருவாக்குவதில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளதுடன் பல மையங்களில் நிகழ்நிலை பரீட்சைகளை நடத்துவதற்கான திட்டங்களை முன்மொழிந்துள்ளனர்.
நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் நிலையான சம்பிரதாயங்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்கு இணங்க, இலங்கை இராணுவம் அரசாங்கத்தின் கருவூலத்திற்கு நன்மை பயக்கும் கொள்முதல் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளது. மேலும், அவர்கள் ஒட்டுமொத்த சேவைத் தரத்தை மேம்படுத்தி, விண்ணப்பதாரர்கள் தங்கள் சாரதி அனுமதிப்பத்திர நிலை குறித்த தானியங்கி அறிவிப்புகளை குறுஞ்செய்திகள் மூலம் பெற்றுக்கொண்டனர்.