27th September 2024 17:54:26 Hours
எதிர்வரும் ஒக்டோபர் 10 திகதி நடைபெறவுள்ள இராணுவ தினத்தை முன்னிட்டு வருடாந்தம் நடைப்பெறும் இராணுவ கொடி ஆசீர்வாத சமய நிகழ்வும் அதன் 75 வது ஆண்டு நிறைவு விழாவும் இன்று (27) காலை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் அநுராதபுரம் புனித ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆரம்பமாகியுள்ளது.
மரபுகளுக்கு இணங்க இராணுவத் தளபதி முதலில் எட்டு வழிபாட்டுத் தலங்களுக்குமான (அடமஸ்தந்திபதி) பிரதம தேரர் அதி வண. கலாநிதி பல்லேகம ஹேமரத்ன நாயக்க தேரர் அவர்களை வணங்கி ஆசி பெற்றதுடன், 'சங்கவாசய' உடமலுவையில் (மேல் அடுக்கு) தேரருக்கு தாம்புலம் மற்றும் 'அட்டபிரிகர' வழங்கி சமய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு முறைப்படி அழைத்தார்.
அதன் பின்னர், இலங்கை வங்கியின் அனுசரணையுடன் இராணுவப் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட பாதுகாப்புச் சோதனைகளுக்காக புதிதாக அமைக்கப்பட்ட பாதுகாவலர் சாவடியை இராணுவத் தளபதி திறந்து வைத்தார்.
பாரம்பரிய மற்றும் மங்களகரமான 'ஹெவிசி' மற்றும் 'மகுல் பெரா' என்ற மேள தாளம் இசைக்கப்பட்டதுடன் வெலிமலுவ பிரதேசத்தில் படையினர்கள் அனைத்து படையணி கொடிகளுடன் நூற்றுக்கணக்கான கொடிகளை ஏந்தி அணிவகுத்து நின்றனர். இராணுவ படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவக் கொடிகள் வெலிமலுவ பிரதேசத்தைச் மூன்று தடவைகள் சுற்றி எடுத்துச் செல்லப்பட்டு மெத மலுவாவில் உள்ள சிரேஷ்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் தளபதி ஏனைய அதிகாரிகளுடன் புனித போதி மரத்தின் அடிவாரத்தில் கொடிகளை வைத்தார்.
மகா சங்கத்தினர் ‘செத்பிரித்’ பாராயணங்களுக்கு மத்தியில் ஆசீர்வாதங்களுடன் புனித போதி மரத்தின் அடியில் மல்லிகை தீர்த்தம் தெளித்து, இராணுவக் கொடிகளில் ஆசிர்வாதம் செய்தனர். லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புனித போதியை சுற்றி மல்லிகை மற்றும் தாமரை மலர்களை தூவி தேசத்தின் இன்றியமையாத பாதுகாவலர்கள் மற்றும் அதற்கு சேவை செய்யும் அனைவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தார்.
இந்நிகழ்வில் லங்காராம ரஜமஹா விகாரையின் பிரதம தேரர் அதி வண. ரலபனாவே தம்மஜோதி தேரர் அவர்களினால் ஆற்றப்பட்ட விசேட தர்ம 'அனுஷாசன' சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டதுடன், அவர் இராணுவத்தின் தேசத்திற்கான பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார்.
மத அனுஷ்டானங்களின் பின்னர், இராணுவத் தளபதியின் 75வது இராணுவ ஆண்டு நிறைவுச் செய்தியை இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களினால் வாசிக்கப்பட்டது. பின்னர் புனித ஸ்தலத்தின் அபிவிருத்திக்காக விசேட நிதியுதவியும் இராணுவத் தளபதியினால் அதமஸ்தானாதிபதிக்கு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட எட்டு ஏழைக் குடும்பங்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கான சாவிகளை இராணுவத் தளபதி அடையாளமாக கையளித்தார். இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இராணுவத்தினரால் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வின் போது இராணுவ பதவி நிலை பிரதானி , பிரதிப் இராணுவ பதவி நிலை பிரதானி , இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி, முதன்மை பணிநிலை அதிகாரிகள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள், படையணியின் படைத் தளபதிகள், பணிப்பகத்தின் பணிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.