Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st January 2024 20:44:02 Hours

2024 புத்தாண்டு இராணுவத் தலைமையகத்தில் சம்பிரதாயங்களுடன் வரவேற்கப்பட்டது

சம்பிரதாயங்கள், அன்பான வாழ்த்துகள் மற்றும் இன்பப் பரிமாற்றங்களுக்கு மத்தியில், ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் 2024 புத்தாண்டு கொடி ஏற்றல், அரச பிரமாணம் வாசித்தல், தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைத்தல், மற்றும் தளபதியின் புத்தாண்டு உரை ஆகியவற்றுடன் திங்கட்கிழமை (01) காலை 'தேசத்தின் பாதுகாவலர்களால் வரவேற்கப்பட்டது.

பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வருகையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிமித்தம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ ஆகியோரால் தேசியக் கொடியும் இராணுவக் கொடியும் ஏற்றப்பட்டன. அணிவகுப்பில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக்கொண்டனர்.

தேசிய கீதம் மற்றும் இராணுவப் கீதம் பாடியதனை தொடர்ந்து வீரமரணம் அடைந்த அனைத்துப் போர்வீரர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் அரச சத்திய பிரமாணம் வாசிக்கப்பட்டது.

பின்னர், அமைப்பின் தலைவர் லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் உரையாற்றப்பட்டது. அவர் ஆற்றிய உரையில் கடந்த காலங்களில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தேசிய பாதுகாப்பை உறுதிப்பாடுத்தியமை மற்றும் நாட்டின் நலன்களுக்காக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட புதிய பொறுப்புகளுடன் எதிர்கால திட்டங்கள் எவ்வாறு அமையும் என்பதையும் விளக்கினார்.

முதலாவதாக, தாய் நாட்டிற்காக வீரமரணம் அடைந்த போர் வீரர்களை மரியாதையுடன் நினைவு கூர்ந்தார், அதே நேரத்தில் இன்னும் சிகிச்சை பெற்று வரும் போர் வீரர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார். அமைப்புக்கு ஆற்றிய பெறுமதிமிக்க சேவைக்காக முன்னாள் இராணுவத் தளபதிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். .

மேலும், தற்போதைய ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு கௌரவ ரணில் விக்ரமசிங்க, கௌரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி பணிகுழு பிரதானி மற்றும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பிற்கான ஆலோசகர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானி ஆகியோரின் அதீத ஆதரவையும் வழிகாட்டலையும் இராணுவத் தளபதி மரியாதையுடன் குறிப்பிட்டார்.

மேலும், மனிதாபிமான நடவடிக்கையின் காலத்திலும், போருக்குப் பிந்தைய சூழ்நிலையிலும் கடினமான காலங்களிலும் சிறப்பாகச் செயல்பட்ட இராணுவத்தினரின் ஒழுக்கம் மற்றும் திறமையை அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும், தேசிய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதன் மூலம் தாய்நாட்டைப் பாதுகாப்பதும் தேசிய பாதுகாப்பைப் உறுதிப்படுத்துவதும் இராணுவத்தின் பிரதான பொறுப்பு என வலியுறுத்தியதுடன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் தமது கடமைகளை ஆற்றிவரும் இராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், தற்போதைய சேவையிலுள்ள இராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற போர்வீரர்கள், போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காக அண்மைக் காலத்தில் ஆற்றிய முக்கியப் பங்கு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஆற்றப்பட்ட சேவைக்கு நன்றியை தெரிவித்தார்.

புதிய நம்பிக்கைகள், அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஆரோக்கியம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிவித்து கொண்டு இராணுவத் தளபதி தனது உரையை நிறைவு செய்தார்.

புத்தாண்டு சம்பிரதாயங்களின் நிறைவை குறிக்கும் வகையில், வளாகத்தில் அனைத்து நிலையினருக்குமான தேநீர் உபசாரத்தில் கலந்துகொண்ட இராணுவத் தளபதி படையினருடன் கலந்துரையாடினார்.

புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், இராணுவத் தளபதி இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே, பதவி நிலை பிரதானி, பிரதி பதவி நிலை பிரதானி, முதன்மை பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் சமய அனுஷ்டானங்களில் கலந்துகொண்டனர். கோட்டே ரஜமகா விகாரையின் விகாராதிபதி கலாநிதி அளுத்நுவர அநுருத்த தேரர் அவர்களின் தலைமையில் மற்றும் மகா சங்கத்தினர் சமய வழிபாடுகளை நடாத்தினர்.