Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th April 2024 13:59:02 Hours

மறைந்த ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் 127 வது பிறந்தநாள் நினைவு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக நினைவுச் சங்கம், வியாழக்கிழமை (ஏப்ரல் 04) ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகத்தில் மறைந்த ஜெனரல் மாண்புமிகு சேர் ஜோன் லயனல் கொத்தலாவல சீஎச் கேபீஈ எல்எல்டி அவர்களின் 127 வது பிறந்தநாள் நினைவு கூறும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ என்டியு அவர்கள் கலந்து கொண்டார்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல குடும்ப உறுப்பினர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் ரியர் அட்மிரல் எச்.ஜி.யு. தம்மிக்க குமார வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல நினைவுச் சின்னத்திற்கு மலர் மாலை அணிவித்தனர். மறைந்த ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்களின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

பின்னர், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக உபவேந்தர் வரவேற்புரை நிகழ்த்தினார். மேலும் இராணுவத் தளபதி தனது உரையில் மறைந்த ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அவர்கள் ஆற்றிய அளப்பரிய சேவையை நினைவு கூர்ந்ததுடன் அன்றைய நிகழ்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

வைபவத்திற்கு மேலதிகமாக, பிலியந்தலை சேர் ஜோன் கொத்தலாவல வித்தியாலயம், கந்தவல நவோத்யா மகா வித்தியாலயம் மற்றும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சிறு ஊழியர்களின் தெரிவுசெய்யப்பட்ட 20 பிள்ளைகளுக்கு பிரதம அதிதியால் புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதியின் வருகையை பாராட்டி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக உபவேந்தர் அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

பின்னர், லாஸ்ட் போஸ்ட், இறுதி அழைப்பு இசைக்கப்பட்டது, மேலும் ஒன்றுகூடியவர்கள் இறுதியில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலவைக் கௌரவிக்கும் வகையில் "தி ஓட்" வாசித்தனர், இறுதியில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நிகழ்வை குறிக்கும் வகையில் அதிதிகள் பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிவிட்டார்.

இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி, விமானப்படையின் பதவிநிலைப் பிரதானி, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், இளங்கலை பட்டதாரிகள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

முன்னாள் பிரதமர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல, இரத்மலானையில் உள்ள புகழ்பெற்ற 'கந்தவல வளவுவ்வ' மாளிகை உட்பட தனது பரம்பரை சொத்துக்களை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு நன்கொடையாக வழங்கினார். இந்த செயல் நாட்டில் அவரது நினைவாக பெயரிடப்பட்ட முதல் பாதுகாப்பு கல்வியற் கல்லூரி உருவாக்க வழிவகுத்தது. இது 1981 ஆம் ஆண்டு முப்படை அதிகாரிகளுக்கான கற்கும் இடமாக உருவாக்கப்பட்டது. கொழும்பில் உள்ள ரோயல் கல்லூரியில் படித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சேர் ஜோன் கொத்தலாவல, தளபதியாக பணியாற்றி பின்னர் ஜெனரல் நிலைக்கு உயர்ந்த புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையை கொண்டிருந்தார். அவர் சிலோன் இலேசாயுத காலாட்படையணியின் அதிகாரி ஆவார்.