Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd November 2023 15:43:35 Hours

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் இரண்டாம் தொகுதி மாணவர்களுக்கு பட்டமளிப்பு

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் இரண்டாவது தொகுதி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) மாலை அத்திட்டிய, ஈகிள் லேக்சைட் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக ஆயுதப்படைகளின் சேனாதிபதியும் கௌரவ ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்துகொண்டார்.

இந்த பட்டமளிப்பு நிகழ்வில் ஜனாதிபதி பணிக்குழு பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, கடற்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவத்தின் 15 பிரிகேடியர்கள், 08 இலங்கை கடற்படை கொமடோர்கள், 07 இலங்கை விமானப்படையின் எயார் கொமடோர்கள் மற்றும் 06 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் என மொத்தம் 36 மாணவ அதிகாரிகள் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகளை முடித்து தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முதுகலைப் பட்டங்களை பெற்றனர்.

இந்த நிகழ்வில் முதலில், ஜனாதிபதிக்கு மரியாதை, வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அன்றைய பிரதம அதிதியினால் பட்டதாரிகளுக்கு தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் முதுகலைப் பட்டம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஜீ.எஸ் செனரத் யாப்பா (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பட்டதாரிகளின் பதிவுப் புத்தகத்தை அங்கீகரித்தார், அதன் பின்னர் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் ஆண்டு புத்தகம்’ வெளியிடப்பட்டது.

இதே சந்தர்ப்பத்தில், அன்றைய பிரதம அதிதி பட்டதாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் கூட்டத்தில் உரையாற்றினார். நிகழ்வில் அவரது சுருக்கமான உரையின் பின்னர், தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தளபதியினால் கௌரவ ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.

அன்றைய பிரதம அதிதி புறப்படுவதற்கு முன்னர், முப்படைத் தளபதியுடன் பட்டதாரிகள் அனைவரும் நிகழ்வின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில் குழு படம் எடுத்துக் கொண்டனர்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியானது அதன் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பாடநெறி இலக்கம் 02/2023 ஜனவரி 09 ஆம் திகதி இலங்கை ஆயுதப்படை மற்றும் பொலிஸ்யின் 36 சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்புடன் தனது பிரதான வருடாந்த கல்வித் திட்டத்தை ஆரம்பித்தது. தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டப்படிப்பு அதிகாரிகளுக்கு தேவையான அறிவுசார் திறனை வளர்ப்பதற்கும், திறம்பட முடிவெடுக்கும் திறனை மூலோபாய அளவிலான தலைவர்களாக மாற்றுவதற்கும் அறிவை வழங்குகிறது. புதிய பாதுகாப்பு சவால்களுக்கு எதிராக தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கு நிறுவனங்களுக்கு இடையேயான மற்றும் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் இந்த பட்டப்படிப்பு எடுத்துக்காட்டுகிறது.