Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th November 2023 11:17:06 Hours

கொழும்பு போர் வீரர்கள் நினைவுத் தூபியில் வீரமரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் ஏற்பாட்டில், உலகப் போரில் உயிர்நீத்த வீரர்களை உள்ளடக்கி, உலக அளவில் வீரமரணம் அடைந்த போர் வீரர்களை நினைவுகூரும் நினைவு தினம் சனிக்கிழமை மாலை (நவம்பர் 11) கொழும்பு விஹாரமஹா தேவி பூங்கா போர்வீரர் நினைவிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஆயுதப்படைகளின் சேனாதிபதி கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்துகொண்டார்.

மதகுருமார்கள், வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் உறவினர்கள், அன்பிற்குரிய வாழ்க்கைத் துணைவர்கள், அமைச்சர்கள், பீல்ட் மார்ஷல், கடற்படையின் அட்மிரல் ஒப் பிலிட், விமானப்படையின் மார்ஷல், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியின் பதவி நிலைப் பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி எம்பில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ் ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி, முன்னாள் படைவீரர் சங்க தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா (ஓய்வு), முன்னாள் படைவீரர் சங்க உறுப்பினர்கள், முப்படை வீரர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஒன்றிணைந்து மரியாதை செலுத்தினர்.

இவ்விழாவில், தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி, மற்றும் மத வழிபாடுகள் இடம் பெற்றன. மேலும், நினைவுச்சின்னமாக முத்திரையொன்றும், போர் நினைவுச் சின்னங்கள் பற்றிய புத்தகமும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டது. பிரதம அதிதி விருந்தினர் வளாகத்தின் நூற்றாண்டு விழாப் பதாகையை திறந்து வைத்ததுடன் தினத்தின் முக்கியத்துவம் குறித்தும் உரையாற்றினார். பிரதம அதிதியுடனான குழு படத்துடன் அன்றைய நிகழ்வுகள் நிறைவடைந்தன.

முதலாம் உலகப் போரின் முடிவிலிருந்து அனைத்து காமன்வெல்த் உறுப்பு நாடுகளும் உட்பட உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பொப்பி தினம் நினைவுகூரப்படுகிறது.