Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th June 2022 15:53:57 Hours

இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு நியமனம்

இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாகவிருந்த மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் புதன்கிழமை (8) முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு இன்று (7) பிற்பகல் இராணுவத் தளபதியின் அலுவலகத்தில் வைத்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களிடமிருந்து 60வது இராணுவப் பதவி நிலை பிரதானியாக நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

2021 டிசம்பர் 12 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் பிரதிப் பதவி நிலை பிரதானியாக நியமனம் பெற்றுக்கொள்ளும் முன்பாக இவர், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக நியமனம் வகித்தார். இராணுவத்தில் பல முக்கிய நியமனங்களை வகித்துள்ள இவர் இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் தளபதியாகவும் நியமனங்களை வகித்துள்ளார். இந்நிலையிலேயே மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்கள் இலங்கை இராணுவத்தின் 60வது பதவி நிலை பிரதானியாக புதன்கிழமை (8 ஜூன் 2022) பதவியேற்கவுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களின் சுருக்கமான விவரம் இங்கே:

இலங்கை இராணுவத்தின் தற்போதைய பிரதிப் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு RWP RSP ndu அவர்கள் 08 ஜூன் 2022 அன்று இலங்கை இராணுவத்தின் 60 வது பதவி நிலை பிரதானியாக பதவியேற்கவுள்ளார். மேலும், மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் இராணுவத்தில் பல குறிப்பிடத்தக்க நியமனங்களை வகித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் பிரதி பதவி நிலை பிரதானியாக நியமனம் வகிக்க முன்னர் அவர் காலாட் பிரிகேட் தளபதி, காலாட் படைப்பிரிவின் தளபதி, இலங்கை இராணுவ உபகரண பணிப்பாளர் நாயகம், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, உள்ளிட்ட நியமனங்களை வகித்துள்ளார்.

1967 நவம்பர் 26 ஆம் திகதி காலியில் பிறந்த இவர், காலி புனித அலோசியஸ் கல்லூரியின் மாணவராவார். 1986 ஒக்டோபர் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் ஒரு கெடட் அதிகாரியாக நிரந்தர உள்வாங்கல் பிரிவு - 26 இல் இணைத்துக்கொள்ளப்பட்டார். இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை பயிற்சியை நிறைவு செய்த பின்னர், அவர் இரண்டாவது லெப்டினன் அதிகாரியாக 3 வது பட்டாலியன் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் இணைக்கப்பட்டார்.

அவரது புகழ்மிக்க இராணுவ சேவைக்காலத்தின் போது, அவர் ஒரு வீரம் மிக்க காலாட்படை வீரராகவும், அதிக சவால்மிக்க சூழல்களில் பணியாற்றும் திறன் மிக்கவராகவும், சிறந்த தளபதியாகவும், பயிற்றுவிப்பாளராகவும் சிறந்த பணிநிலை அதிகாரியாகவும் ஆளுமை மிக்கவராகவும் விளங்கினார்.

அவரது கட்டளையிடும் திறன் மற்றும் தீர்மானம் எடுக்கம் திறன்கள் காரணமாக அவருக்கு பல்வேறு கட்டளையிட்டும் அதிகாரத்துடனான பதவி கிடைக்கப்பெற்றன. அப்பதவிகளின் கீழ் அவர் காலாட் படைக் குழுக்களை முன்னுராதரணமான தளபதியாகவிருந்து அவர் வழிநடத்தினார். அதனையடுத்து அவர் 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரியாக நியமனத்தை பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவர் தந்திரோபாய திட்டமிடல்களை கட்டமைத்து அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தும் வல்லமை கொண்டவராகவும் விளங்கினார்.

மேலும், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம், 66 வது படைப்பிரிவு, 532 மற்றும் 512 பிரிகேடுகளின் தளபதியாகவும் இவர் நியமனம் வகித்தார். அத்தோடு காலாட்படை பயிற்சி நிலையம் மற்றும் இராணுவ பயிற்சி பாடசாலை ஆகியவற்றின் தளபதியாகவும் பணியாற்றினார்.

பதவி நிலை அதிகாரியாக இவர் இராணுவ தலைமையகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் முக்கிய நியமனங்களை வகித்துள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்க சில; காலாட்படை பிரிவில் பணிநிலை அதிகாரி 1, இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் நிலையத் தளபதியாகவும் நியமனம் வகித்தார். அதன் கீழ் படையணி அதிகாரிகள் மற்றும் படையினருக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினார்.

அவர் ஒரு வெற்றிகரமான பயிற்றுவிப்பாளராகவும் , சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை நிறுவன வழிநடத்தும் அதிகாரியாக சேவையாற்றியள்ள அவர், போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஐநா அமைதிகாக்கும் பணிகளின் முதல் இலங்கை இராணுவ கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளதோடு, கொங்கோ ஐநா அமைதிகாக்கும் பணிகளிலும் சேவையாற்றியுள்ளார். ஈரானின் இஸ்லாமிய குடியரசில் இராணுவ கண்காணிப்பாளர் மற்றும் அமைதி காக்கும் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்றுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு ஒரு சிறந்த பிரதிநிதியாவார். உறவுகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கும் திறன்கொண்ட இவர், கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரியாவார். இவர் மனித வள முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டமும் மனித வள முன்னேற்றத்தில் முதுகலைப் டிப்ளோமாவும் பெற்றுள்ளார். அவர் இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் மோதல் தீர்வு மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளில் முதுகலை டிப்ளமோ பெற்றுள்ளார்.

ஒரு தொழில்முறை ஆலோசகர் மற்றும் உளவியல் ஆய்வுகள் நிறுவனத்தில் இருந்து வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கான உயர்தரச் சான்றிதழைப் பெற்றுள்ள இவரது பேச்சுத்திறன் காரணமாக அவருக்கு இலங்கை தொழில் ஆலோசகர்கள் நிறுவனத்தில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான ஆசிய பசிபிக் மையத்தின் புகழ்பெற்ற பட்டதாரியான இவர், நெருக்கடி முகாமைத்துவ பாடநெறியை இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான், மொங்கோலியா, இந்தோனேசியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்துள்ளார்.

மேலும் அவர் இந்தோனேசியா குடியரசின் தேசிய எதிர்தாக்குதல் நிறுவகத்தில் மூலோபாய மற்றும் எதிர்தாக்குதல் ஆய்வுகளின் முதுமானி கல்வியை நிறைவு செய்தார். மொங்கோலியாவில் உள்ள பசிபிக் சிறப்பு கூட்டு செயல்பாட்டு பல்கலைக்கழகத்தின் மங்கோலிய ஆயுதப்படைகளின் சிறப்பு நடவடிக்கைக் கட்டளையில் பசிபிக் பகுதி பாதுகாப்புத் துறை பணிக்குழு (PASSWG) பயிற்சித் திட்டத்திலும் அவர் கலந்துகொண்டார். மேலும், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் கொத்து வெடிமருந்துகளை தடை செய்வதற்கான சர்வதேச மாநாட்டிற்கான நாட்டின் பிரதிநிதியாக உள்ளார்.

மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்கள் இராணுவத்திற்கு ஆற்றிய அர்பணிப்பு மற்றும் துணிச்சலான சேவைகளுக்காக பல பதக்கங்களை பெற்றுள்ளார். ரண விக்கிரம பதக்கம், ரண சூர பதக்கம், தேசபுத்திர பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வன்னி மனிதாமிமான நடவடிக்கை பதக்கம், பூர்ண பூமி பதக்கம், வடக்கு கிழக்கு மனிதாமிமான பதக்கம், ரிவிரெச போர்கள சேவைப் பதக்கம், 50 வது சுதந்திர தின பதக்கம், இலங்கை ஆயுத சேவை மற்றும் நீண்டகால சேவைக்கான பதக்கம், கொங்கோ நாட்டின் ஐநா அமைதிகாக்கும் பணிகள் மேற்பார்வைக்கான பதக்கம், வெளிநாட்டுச் சேவைக்கான பதக்கம், சுவர்ணபூமி பதக்கம், சேவை பாராட்டுக்கான பதக்கம் ஆகியவற்றையும் பெற்றுள்ள இவர் சிங்களவர்களின் அங்கம்புர தற்காப்பு கலைதுறையில் கொண்டுள்ள அனுபவத்தை கருத்தில் கொண்டு அங்கம்புர தற்காப்பு கலை கழகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.