Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd December 2023 20:35:31 Hours

சிறுவர்களுக்கு புனானியில் தலைமைத்துவத் திறன்கள் தொடர்பான செயலமர்வு

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது காலாட் படைப் பிரிவினரால் பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை உள்ளடக்கிய 11 உள்ளூர் பாடசாலைகளில் 46 சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு 'தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துதல்' என்ற தலைப்பில் இரண்டு நாள் செயலமர்வு புனானி பயிற்சி பாடசாலையில் 2023 டிசம்பர் 21 முதல் 22 வரை முன்னெடுக்கப்பட்டது.

உள்ளுர் சிங்கள, தமிழ், மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் இளம் மாணவ தலைவர்கள் மத்தியில் தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்தல் மற்றும் அனைத்து சமூகங்களின் பிள்ளைகளுக்கிடையில் ஒற்றுமை, புரிந்துணர்வு, சகவாழ்வு, இன நல்லிணக்கம் மற்றும் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்திட்டமானது வகுப்பறைச் செயல்பாடுகள் மட்டுமின்றி, பங்கேற்பாளர்களிடையே குழுப்பணி, முன்முயற்சி மற்றும் தன்னம்பிக்கையைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு வெளிக்கள நடவடிக்கைகளையும் உள்ளடக்கியிருந்தது. கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்களின் வழிக்காட்டலுக்கமைய இலங்கை மெதடிஸ்ட் தேவாலயத்தின் ஆயரும் "சமாதானத்திற்கான சர்வமதக் கூட்டமைப்பின் வண. எபினேசர் ஜோசப் அவர்களின் நிதியுதவியுடன் இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

சுருக்கமான தொடக்க விழாவில் உரையாற்றிய மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இளம் தலைமுறையினரிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை ஊக்குவிக்கும் அதே வேளையில், அவர்களின் உள்ளார்ந்த தலைமைத்துவ திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இளைஞர்களையும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். எதிர்காலத்தில் இளைஞர்கள் தன்னம்பிக்கை, பொறுப்புணர்வு மற்றும் திறமையான தலைவர்களாக மாறுவதற்கு இந்த செயலமர்வு சிறந்த வாய்ப்பாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இறுதியாக, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, பங்கேற்பாளர்களிடம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஒருவருடைய மொழியில் இருந்து ஒரு சில வார்த்தைகளையாவது கற்றுக் கொள்ளவும், கலாசார நட்புறவை ஏற்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வை நனவாக்க உதவிய வண. எபினேசர் ஜோசப் மற்றும் "சமாதானத்திற்கான சர்வமதக் கூட்டமைப்பிற்கு" மேலும் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், இளம் தலைமுறையினரின் நலன்களுக்காக சரியான நேரத்தில் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ மற்றும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.

23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 23 காலாட் படைப்பிரிவின் பணி நிலை அதிகாரிகள் மற்றும் 231 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.