Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd August 2022 18:20:48 Hours

இராணுவ சேவை வனிதா பிரிவின் ‘விரு சிசு பிரதீபா’ புலமைப்பரிசில் திட்டத்தினூடாக போர்வீரர்களின் 91 பிள்ளைகளுக்கு உதவித்தொகைகள்

இராணுவ சேவை வனிதா பிரிவினால் பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்ட 'விரு சிசு பிரதீபா' புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ், மாணவர்களின் உயர்கல்விக்கு ஊக்கமளிக்கும் முகமாக இராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 91 பிள்ளைகளுக்கு தலா 25,000/= பெறுமதியான நிதி உதவித்தொகைகள் திங்கட்கிழமை (22) வழங்கப்பட்டன.

இராணுவ சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இப் பரிசளிப்பு விழாவில், 2009 மே மாதத்திற்கு முன்னர் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக போராடிய நிரந்தரமாக காயமடைந்த மற்றும் உயிரிழந்த இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.

தேசிய பாதுகாப்பு நிதியம் மற்றும் DFCC வங்கி ஒருங்கிணைத்து அனுசரணை வழங்கிய இத்திட்டத்தின் மூலம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஒவ்வொரு மாணவருக்கும் 25,000/= ரூபா வைப்பிலிடப்பட்டதுடன் இதன் மூலம் பயனாளிகளுக்கு மாதாந்த ஊக்கதொகை வழங்கப்படுகிறது.

சுகாதார நலன் கருதி 25 பயனாளிகள் கலந்துகொண்ட இவ்விழாவில் பாரம்பரிய எண்ணெய் விளக்கு ஏற்றப்பட்டதோடு இராணுவ சேவை வனிதா பிரிவின் பாடலை தொடர்ந்து, உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு புலமைப்பரிசில் பெறும் சிரார்கள் வெற்றிலையை வழங்கி அன்றைய பிரதம விருந்தினரான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மற்றும் இராணுவ சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோரை வரவேற்றனர்.

லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் தனது உரையில், பயனாளிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துடன், மறைந்த தந்தைகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு கௌரவப்படுத்தும் முகமாக நன்றாகப் படித்து நாட்டின் தேசப்பற்றுள்ள குடிமக்களாக மாற வேண்டும் என கூறினார். பின்னர் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களுடன் பிரதம விருந்தினர் கலந்துரையாடியதுடன் தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி சன்ன வீரசூரிய, இராணுவச் செயலாளர் மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போதொட்ட, இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க, நலன்புரி பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் றொஹான் ராஜபக்ஷ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் படையினர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.