11th May 2022 17:19:27 Hours
நாட்டில் அமைதியும் இயல்பு நிலையும் பேணுவதற்கும் நாடளாவிய ரீதியில் பொது மக்களுக்கு அவசியமான அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கான அதிகபட்ச ஒத்துழைப்புக்களை பாதுகாப்பு படையினருக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடந்த சில மணித்தியாலங்களில் எவ்விதமான வன்முறைச் செயற்பாடுகளும் பதிவாகவில்லை என்பதோடு நீர்கொழும்பு பகுதியில் இரு இன மக்கள் குழுக்களை தூண்டிவிடுவதற்காக மேற்கொள்ளப்படவிருந்த முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளன என்றும் புதன்கிழமை (11) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இன்றும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில், நாட்டு மக்களுக்கு அவசியமான அத்தியாவசிய தேவைகளின் போக்குவரதினை ஒழுங்குப்படுத்தும் படையினருக்கு வீதி தடைகளை ஏற்படுத்தி உரிய அனுமதியின்றி பயணிக்கும் வாகனங்களை நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, படையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எந்தவொரு தேவைக்காகவும் குழுக்களாக வெளிப் பகுதிகளில் நடமாடுவதை தவிர்த்துகொள்ளுமாறும் அவர் கேண்டுக்கொண்டார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் ஷவேந்திர சில்வா, மக்கள் தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடுவதை பாதுகாப்பு படையினரால் அனுமதிக்க முடியாது. நன்கு அனுபவம் கொண்ட படை என்ற வகையில், சுய பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்புச் செயற்பாடு ஆகியவற்றை சரியான முறையில் முகாமைத்துவம் செய்யும் இயலுமை எமக்கு உள்ளது. அதனால், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வெளிநாட்டு தரப்புக்கள் இங்கு வருவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. தொழில்ரீதியாகத் தகைமை பெற்ற முப்படையினர் என்ற வகையில் சொந்த பாதுகாப்பு விவகாரங்களை கையாளும் திறன்களை நாம் கொண்டுள்ளோம்” எனவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.
இச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கு பொலிஸாருக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக அழைக்கப்பட்ட முப்படையினர், தங்களால் இயன்ற குறைந்தபட்ச சக்தியைப் பயன்படுத்தி அமைதியின்மை நிலையை தணிக்கும் முயற்சிகளை மேற்கொள்வர். அதேநேரம் அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை கொண்டு நாட்டில் அதிகரித்து வரும் வன்முறையைத் தடுக்கும் வகையில் அவசரகால நடவடிக்கைகளை அறிவிக்க நாங்கள் தயக்கத்துடன் நிர்ப்பந்திக்கப்பட்டோம்.
அதனால் வன்முறைச் செயல்கள், தனியார் மற்றும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தல் மற்றும் மக்களின் உயிர்களுக்குத் தீங்கு விளைவித்தல் போன்ற செயல்களில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அனைத்து இலங்கை சகோதர, சகோதரிகளிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறோம். சீருடை அணிந்துள்ள பொலிஸாரும் மனிதர்களே, அவர்களை துன்புறுத்தியும், அவமானப்படுத்துவதாலும், சட்டம் ஒழுங்கைப் பேண முடியுமா என்றும் வினவினார்.
“கடந்த 48 மணி நேரத்தில் தீவிபத்துகள், தனியார் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மிகப் பெரியவை, அது தொடர்பில் இன்னும் மதிப்பிடப்படவில்லை. அந்த சொத்துக்களின் உரிமையாளர்கள் பலர் உயிருக்கு பயந்து இன்னும் தலைமறைவாக உள்ளனர். அதனால் வன்முறைச் செயற்பாடுகளை மட்டுப்படுத்துவதற்காகவே அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமாறு படையினரை அறிவுறுத்தினோம். அதற்கமைய, எமது வீரர்கள் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் பொறுமையுடன் நிலைமையை கையாண்ட விதத்தினை நீங்கள் பார்த்திருப்பீர்கள் எனவும் தெரிவித்தார்.