Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd December 2021 22:30:36 Hours

“எனது இராணுவ வாழ்வில் உயர் பதவியொன்றுக்கான தேர்தலுக்கு அவசியமான பண்புகள் என்னுள் புகுத்தப்பட்டுள்ளன” – அதிமேதகு ஜனாதிபதி

“இந்தப் பயணத்தைத் ஆரம்பிக்கும்போது, உங்கள் கட்டளையின் கீழ் உள்ள வீரர்கள் சாதாரண மனிதர்களாவர், “சூப்பர் மேன்கள் அல்ல” என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். சாதாரன வீரர்களிடமிருந்து சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டியது உங்களது பொறுப்பாகும். அத்தகைய பெறுபேறுகளை பெற வேண்டுமாயின் உங்கள் கட்டளையின் கீழ் உள்ளவர்களுடன் நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும். அதற்காக ஆரோக்கியம், கடமைக்கு ஏற்ற மனநிலை, அவர்களின் நலன்கள், மன உறுதி, உடற் பயிற்சி, பயிற்சிகள், ஆயுதங்களைக் கையாளுதல் மற்றும் பிற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும், மேலும் அவர்களின் உணவு மற்றும் தங்குமிடம் தரமானதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

அதேபோல், ஒரு தலைவராக, உங்களுக்குக் கீழ் உள்ளவர்களை பற்றி நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் - அவர்களின் பெயர்கள், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்களின் குடும்பத்தவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்களின் குணாதிசயங்கள் என்ன? அவர்களின் திறனைப் பற்றிய முழுமையான அறிவை தெரிவு செய்து அந்த திறன்களை எதற்காக பயன்படுத்தலாம் என தீர்மானிக்கும் இயலுமை உங்களிடம் இருக்க வேண்டியது அவசியமாகும் என ஞாயிற்றுக்கிழமை (19) தியதலாவை இராணுவ கல்வியற் கல்லூரியில் நடைபெற்ற 316 புதிய அதிகாரி பயிலிளவல் அதிகாரிகளுக்கான பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

பட்டதாரிகளுக்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் முழுமையான உரையின் முழு வடிவம்வருமாறு:

“இன்று காலை இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரவணை வழங்குவதற்கான 96 வது அணிவகுப்பில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்று பணியமர்த்தப்பட்ட புதிய அதிகாரிகளை நான் வாழ்த்துவதோடு, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி, அணிவகுப்புக்கு கட்டளையிடும் கட்டளையாளர், கல்லூரி சாஜண்ட் மேஜர், வாத்திய பயிற்றுவிப்பாளர், புதிய அதிகாரிகளுக்கான உயர் மட்ட பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் இங்கு பயிற்சி பெற்ற மாலைத்தீவு, ருவாண்டா மற்றும் சாம்பியா ஆகியவற்றின் ஆறு புதிய அதிகாரிகளும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற இலங்கை 5 அதிகாரிகளும் இன்றை அணிவகுப்பில் இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.

ஒரு நாட்டின் இராணுவத்தில் ஆணையிடும் அதிகாரியாக இணைவது எந்தவொரு இளைஞருக்கும் மரியாதையாகும். இத்தகைய தேசபற்றுள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களை வளர்த்த புதிய அதிகாரிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூறுகிறேன். அவர்கள் தங்கள் வாழ்வில் இந்த முக்கியமான தருணத்தை எட்டியிருப்பதைப் பற்றி நீங்கள் பெருமைப்படுகிறீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் எதிர்காலத்தில் ஆயுதப் படைகளின் செயற்பாடுகள் மூலம் அவர்கள் உங்களை மேலும் பெருமைப்படுத்துவார்கள் என்றும் நான் நம்புகிறேன். நான் தற்போது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக உங்கள் தளபதியாகவும் உங்கள் முன்பாக நிற்கின்றேன்.

ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, நீங்கள் அனைவரும் இப்போது நிற்கும் இடத்தில், நான் ஓர் இளம் அதிகாரியாக பயிலிளவல் அதிகாரிகளின் அணிவகுப்பின் 4 வது பிரிவில் நின்றுகொண்டிருந்தேன். நான் பெற்ற பயிற்சி அனுபவங்களை என்னால் எந்த தயக்கமும் இல்லாமல் சொல்ல முடியும். எனது இராணுவ வாழ்க்கை காலத்தில் என்னுள் புகுத்தப்பட்ட பல பண்புகள் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு நான் தேர்வாவதற்கு இன்றியமையாத காரணிகளாக இருந்தன. எனவே எனது தொழில் வாழ்க்கையின் சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அதனால் நீங்களும் நல்ல பலன்களை அடையக்கூடும்.

பயிற்சி காலத்தின் போதான ஒழுக்கம் என்பது உங்களது தொழில்முறை வாழ்க்கையில் முக்கிய பங்கை வகிக்கும். அதன்படி, நீங்கள் இந்த நிறுவனத்தில் நுழைந்த முதல் நாளிலிருந்தே, தினமும் காலையில் எழுந்ததும் கட்டில் விரிப்புக்களை மடித்து வைத்தல், உங்கள் ஆடைகளை ஒழுங்குபடுத்தல், உங்கள் காலணிகளை மெருகூட்டல் என்பவற்றோடு உங்கள் ஆடைகள் மற்றும் தோற்றத்தின் ஒவ்வொரு அம்சமும் தூய்மையானதாக இருப்பதையும் உறுதிசெய்து கொள்வது, உங்களின் பயிற்சியின் முக்கிய பகுதியாகும். அதேபோல் உடற் பயிற்சிகளையும் வழக்கமாகதாக கொண்டிருப்பது அவசியமாகும்.

இதற்கு ஒரு காரணம் உள்ளது: இந்த எளிய பணிகளில் நீங்கள் செலுத்தும் கவனம் ஒழுக்கத்தை உருவாக்குகிறது, அது விவரங்களுக்கு கவனத்தை வளர்க்கிறது, மேலும் உங்கள் நாளைத் தொடங்கும் போது அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது சாதனை உணர்வை வழங்குகிறது. மேற்படி சிறிய பழக்க வழங்கங்கள் உங்கள் ஒழுக்கங்களை உருவாக்குவதாக அமைந்துள்ளது. அதனால் உங்கள் நாள் ஆரம்பிக்கின்ற வேளையில் உங்களுக்கு புத்துணர்வை அளித்து சாதனை உணர்வுகளை தூண்டுவதாகவும் அமைந்திருக்கும். உங்கள் வாழ்க்கை உங்களை அழைத்துச் செல்லும் இடங்களில் எல்லாம் மேற்படி பண்புகள் உங்களுக்கு உதவுவதாக இருக்கும். சமிக்ஞை படையணியின் ஓர் இளம் அதிகாரியாக நான் இருந்த காலத்தில் ரெஜிமெண்ட் தலைவர் நிதியின் கணக்குகள் எவ்வாறு சமப்படுத்தப்படுகின்றன, அதற்கான பொறுப்பான அதிகாரியால் அந்த கணக்குகள் எவ்வாறு சரி செய்யப்படுகின்றன என நன்கு அவதானித்துள்ளேன். அதற்கமைய ஒழுக்கமும் நேர்மையும் இராணுவ வாழ்வில் மிகவும் இன்றியாதனை என்பதால் அவர்கள் அவர் இந்த சிறிய பணியிலும் அதிக கவனம் செலுத்துவார். இளம், அதிகாரியாக இருந்த எனக்கு இது ஒரு விலைமதிப்பற்ற பாடமாக அமைந்திருந்து.

நீங்கள் கல்வியற் கல்லூரியில் இருந்த காலத்தில், நீங்கள் ஈடுபட்ட பெருமளவான பயிற்சிகள் உங்கள் சக அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்தவையாகும். மற்றவர்களுடன் இணைந்து நன்றாக செயலாற்றும் திறனை வளர்ப்பது இராணுவத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும். ஒரு தனிநபராக நீங்கள் எவ்வளவு திறமையாக இருந்தாலும் மற்றவர்களின் ஆதரவின்றி நீங்கள் வெற்றிபெற முடியாத சூழ்நிலைகள் உங்கள் வாழ்க்கையில் வரக்கூடும், எனவே கூட்டுப்பணி என்பது ஒரு அத்தியாவசியமான வாழ்க்கைத் திறனாகும். அந்த திறனை மேம்படுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் இராணுவத்தில் உங்கள் தொழில் வாழ்க்கைக்கு வழங்கப்படுகின்ற போதிய வாய்ப்புக்களை பயன்படுத்திகொண்டு, அதிகாரிகள் என்ற வகையில் உங்களது தலைமைத்துவ பண்புகளையும் வளர்த்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

உங்களை ஒரு படையணியிக்கு நியமிக்கப்படும் சந்தர்ப்பத்தில், அதனை ஏற்றுக்கொள்ளும் மாத்திரத்திலேயே, உங்களுக்கு கீழ் உள்ளவர்களையும் பொறுப்பேற்கும் மனப்பாங்கு அவசியமானதாகும். அதேநேரம் உங்கள் பதவிகள் உயர்வடையும் போது அதற்கேற்ப பொறுப்புக்களும் அதிகரிக்கும்.

என்றாவது ஒரு நாள், உங்களில் ஒருவர் இராணுவ தளபதியாகி, முழு அமைப்புக்கும் பொறுப்பானவராகவும் அதன் கீழ் உள்ளவர்களுக்கு பொறுப்பாகவும் செயற்பட வேண்டிய நிலைமை ஏற்படலாம். அதனால், நீங்கள் இந்தப் பயணத்தைத் தொடங்கும்போது, உங்கள் கட்டளையின் கீழ் உள்ள வீரர்கள் சாதாரண மனிதர்கள். அவர்கள் “சூப்பர்மேன்” அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்களிடமிருந்து சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளும் பொறுப்புகள் உங்களை சார்ந்துள்ளன. உங்கள் கட்டளையின் கீழ் உள்ளவர்களுடன் நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும். அதற்காக ஆரோக்கியம், கடமைக்கு ஏற்ற மனநிலை, அவர்களின் நலன்கள், மன உறுதி, உடற் பயிற்சி, பயிற்சிகள், ஆயுதங்களைக் கையாளுதல் மற்றும் பிற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும், மேலும் அவர்களின் குடும்ப நிலை, உணவு மற்றும் தங்குமிடம் தரமானதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

நீங்கள் உங்கள் கீழ் இருப்போரின் திறன்கள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் என்பதோடு, அவற்றை தக்க சந்தர்ப்பத்தில் எவ்வாறு பயன்படுத்திகொள்வது என்றும் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்போது மாத்திரமே அவர்களிடமிருந்து சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும். சிறந்ததொரு தலைவர் என்ற வகையில் நீங்கள் சிறப்பாக செயற்பட முடியும் என்பதோடு, உங்களின் கட்டளையின் கீழ் இருப்போரை எவ்வாறு ஊக்கப்படுத்தலாமென அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகும். அவ்வப்போது எழும் பின்னடைவுகள், தடைகள் மற்றும் சிரமங்கள் என்பன இருந்த போதிலும் அவர்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியமாகும்.

1980 களின் முற்பகுதியில், கஜபா படையணியின் எனது கட்டளை அதிகாரி ஜெனரல் விஜய விமலரத்ன ஆவார். 1984 ஆம் ஆண்டு கஜபா படையணி வடக்கு மாகாணத்தை கைப்பற்றிய போது, யுத்தம் தீவிரமடைந்ததால் நாங்கள் யுத்தம் முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என ஜெனரல் விமலரத்ன எங்களிடம் கூறினார். அதனால் எங்களுக்கு வழங்கப்படும் 6 மாதத்தின் பின்னரான ஓய்வு காலம் இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுப்பட வேண்டும் என்ற எண்ணத்தை ஊக்கப்படுத்திக்கொண்டதோடு, அவர் வழங்கிய ஊக்குவிப்பின் காரணமாக மற்றைய விடயங்களை மறந்து அங்கேயே நிலையாக தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானோம். அதேபோல் 2009 இல் யுத்தத்தின் இறுதி பகுதியில் எமது இராணுவத்தினர் எண்ணற்ற தியாகங்களைச் செய்து, சொல்ல முடியாத அளவில் துன்பங்களைச் சந்தித்தனர்.

பிரிவினைவாதத்திற்கு முகம்கொடுத்த இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பணிகளுக்காக அனைவரும் அரப்பணிப்புக்களை மேற்கொண்டனர். இராணுவத்தினர் மாத்திரமின்றி அப்போதைய ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் பாதுகாப்பு செயலாளராக இருந்த எனக்கும் இராணுவத்திலிருந்த சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் பணிகளை பகிர்ந்துகொண்டு அர்ப்பணிப்பாக செயற்பட வேண்டிய நிலைமை காணப்பட்டது. அத்தகைய அர்ப்பணிப்புக்கள் தான் இன்று முப்பது வருடங்களுக்கு பின்னர் இலங்கைக்கு சுதந்திரத்தை பெற்றுத் தந்துள்ளது.

இன்று இலங்கை அனுபவிக்கும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஒருபோதும் சாதாரணமாக கருதப்படக்கூடாது. இளம் அதிகாரிகள் என்ற வகையில், உங்களது திறமைக்கு ஏற்றவாறு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிகளில் உங்களின் பங்களிப்பு நிலைக்கும். நீங்கள் பணியாற்றும் சூழல் நாங்கள் அனுபவித்த சூழலை விடவும் மிகவும் பாதுகாப்பானது என்றாலும் நீங்களும் சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய தருணங்கள் உருவாகலாம்.

அந்த சந்தர்ப்பங்களில், உங்கள் பயிற்சி, உங்கள் உள்ளுணர்வு மற்றும் உங்கள் அனுபவத்தை நம்புவதற்கும், அச்சமின்றி அந்த முடிவுகளை எடுப்பதற்கும் உங்களுக்கு தைரியம் இருக்க வேண்டும். எப்போதாவது நீங்கள் தவறுகளைச் செய்யலாம். தோல்விகள் கூட வாழ்வில் விலைமதிப்பற்ற அம்சங்களாக மாறக்கூடும். அதனால், தோல்விகளை கண்டு நீங்கள் வெட்கப்படகூடாது. தோல்விகள் உங்கள் பாடப் பரப்புக்குள் காணப்படும் விலைமதிப்பற்ற பகுதியாகும்.

எனவே நீங்கள் தைரியமாக தீர்மானங்களை எடுக்க அச்சப்படுகின்ற பட்சத்தில் தோல்வி உங்களை தழுவிக்கொள்ளலும். எனவே, நேர்மறையான சிந்தனைகள் மிகவும் அவசியமானது, அவை உங்கள் மீது மாத்திரமின்றி உங்கள் அணியில் உள்ளவர்கள் மீதும் உள்ள நம்பிக்கை உங்கள் இதயத்திலிருந்து வெற்றியின் நம்பிக்கையை உருவாக்குவதாக அமையும்.

அதனால் இலங்கை இராணுவத்தின் அதிகாரவாணை கொண்ட அதிகாரியாக நீங்கள் வெளியேறும் போது, நீங்கள் பெற்ற பயிற்சிகளை உங்கள் வாழ்வில் உயர்வை எட்டுவதற்கான உரிய தருணங்களில் நீங்கள் பயன்படுத்திகொள்வீர்கள் என நம்பிக்கையுட் வாழ்த்துகிறேன்.