19th December 2021 19:50:32 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா வெள்ளிக்கிழமை (17) மத அனுட்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்றார். இதன்போது, புதிய தளபதிக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் 11 வது இலங்கை இலேசாயுத காலாட்படை சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
மகா சங்கத்தின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் புதிய அலுவலக பணிகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். இந்நிகழ்வில் வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு பராமரிப்பு பகுதி தளபதி , 51 , 52 மற்றும் 55 வது படைப்பிரிவுகளின் தளபதிகள் மற்றும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வின் போது இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மத குருமார்களும் கலந்துகொண்டிருந்தமை சிறப்பம்சமாகும். அதனையடுத்து இடம்பெற்ற குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வினை தொடர்ந்து யாழ். தளபதியாக பொறுப்பேற்றதன் நினைவம்சமாக மாங்கன்று ஒன்றினையும் நாட்டிவைத்தார்.
அதேபோன்று, யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் கடமையாற்றி போரில் உயிர் நீத்த வீரர்களின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வை தொடர்ந்து புதிய யாழ். தளபதிக்கு படைப் பிரிவுத் தளபதிகள், பிரிகேட் தளபதிகள், பணி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை அலகுகளின் சிப்பாய்கள் ஆகியோர் மத்தியில் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியாக நியமனம் வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்கு பாதுகாப்பு படைகளின் தளபதி, 51, 52 மற்றும் 55 வது படைப் பிரிவுகளின் தளபதிகள், பிரிகேட் தளபதிகள் கட்டளைப் அலகுகளின் கட்டளை அதிகாரிகள், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள அதிகாரிகள், சிப்பாய்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.