24th November 2021 21:11:13 Hours
வருகை தந்த ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு பேரவையின் செயலாளர் திரு நிகோலாய் பட்ருஷேவ் மற்றும் சில ரஷ்ய பிரதிநிதிகள் திங்கட்கிழமை (22) ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்து ரஷ்யா - இலங்கை இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன மற்றும் ரஷ்ய இராஜதந்திரிகள் இக் கலந்துரையாடலில் கலந்துக்கொண்டனர்.
ரஷ்ய ஆயுதப் படைகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
இருதரப்பு கலந்துரையாடலின் முடிவில், திரு நிகோலாய் பட்ருஷேவ் மற்றும் ஜெனரல் கமல் குணரத்னே (ஓய்வு) ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டன.
2008 ஆம் ஆண்டு முதல் திரு பட்ருஷேவ் ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு பேரவையின் செயலாளராக இருந்து வருவதுடன் மேலும் அவர் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு விவகார ஆலோசகராக செயற்படுகின்றார்.