09th May 2021 20:18:01 Hours
மேலும் கொவிட்-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, மேலும் ஒரு மறுஆய்வுக் கூட்டம், இன்று (9) ராஜகிரியவில் உள்ள கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் (NOCPCO), அனைத்து சுகாதார அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்றதோடு, கொடிய வைரஸின் பரவுதல் முறைகள் மற்றும் அவசர ஏற்பாடுகள், பி.சி.ஆர் சோதனை நடைமுறைகள், இருக்கும் உத்திகள் மற்றும் அவற்றின் விளைவுகள், அந்த பொறுப்பான அதிகாரிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் வைத்தியசாலைகள், இடை நிலை பராமரிப்பு நிலையம் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள புதியதொற்றாளர்கள் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்த கலந்துரையாடலானது நோப்கோவின் தலைவரும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சய முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசெல குணவர்தன மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தவிசாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல்களில் மேலும் சில மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
புதிய முன்னேற்றங்கள் குறித்த சமீபத்திய நிலையை மதிப்பிட்டு புதிய முன்னேற்றங்களை முன்வைக்கும் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ,இறப்பு விகிதங்களின் அதிகரிப்பு மற்றும் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 2000 தொற்றாளர்கள் கண்டறியப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் 19,000 க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் உள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியதோடு, வைரஸின் பரவலை நிர்வகிப்பதும், நாட்டை மொத்தமாக முடக்காமல் நடத்துவதும் அரசாங்கத்தின் இரட்டை அணுகுமுறை என்று பங்கேற்பாளர்களிடம் கூறினார்.
தடுப்பூசி குறித்து அவர் தெரிவிக்கையில் ஜனாதிபதி கலந்துரையாடல்களுக்குப் பிறகு தேவையான தடுப்பூசிகளை வழங்குவதற்கு கூடுதல் ஒத்துழைப்பை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு உறுதியளித்துள்ளது என்றார்.
நாட்டில் தற்பொழுது மூன்று வகையான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இருப்பதால், தடுப்பூசிக்கான வழிமுறை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. பங்கேற்பாளர்களிடம் கூறிய அவர் கொழும்பு, கம்பஹா மற்றும் கலுத்துரை மாவட்டங்கள் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் உள்ள பகுதிகள் என்றும், எந்தவொரு மருத்துவ அதிகாரியும் நோயாளிகளை கொண்டு செல்ல தங்களது உதவியினை கோருமிடத்து அவர்களுக்கு தேவையான போக்குவரத்து தேவைகளை வழங்குமாறு அனைத்து பாதுகாப்பு படைத் தளபதிகள், படைப்பிரிவின் படைத் தளபதிகள் ஆகியோருக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்கும் முகமாகவும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், இணையவழி சூம் தொழில்நுட்பத்தின் (Zoom technology ) மூலம் குறித்த கூட்டத்தில் பல பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் (RDHS) மற்றும் சுகாதார வைத்திய அதிகாரிகள் (MOH) ஆகியோர் தொடர்பு கொண்டனர்.
அவர்களில் சிலர் தங்கள் பிரச்சினைகளை இணையவழி தொடர்புகளின் மூலம் தெளிவுபடுத்தி, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைத் தேடினர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதோடு, தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை திருத்தி புதியவற்றை விரைவில் வெளியிட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.