23rd April 2021 19:29:25 Hours
கஜபா படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 10 வது தளபதியாக பனாகொடவிலுள்ள அப்படைத் தலைமையகத்தில் தனது அலுவலக கடமைகளை செவ்வாய்க்கிழமை (20) பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியினை பதவி நிலை அதிகாரிகள் வரவேற்றதோடு, அவருக்கு 12 வது கஜபா படையணியின் படையினரால் காவலர் அறிக்கையிடல் வழங்கப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டதுடன் மைதானத்தில் கூடியிருந்த படையினராலும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அதனையடுத்து புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் கையொப்பம் இட்டதுடன், பதவியேற்பின் அடையாளமாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.
பின்னர் இடம்பெற்ற அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் பங்கேற்ற தளபதி உரையொன்றை நிகழ்த்தியதுடன் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அதிகாரிகள், படைப்பிரிவு படைத் தளபதிகள் , பிரிகேட் தளபதிகள், பணிப்பாளர்கள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படைத் தலைமையகத்தின் சிப்பாய்கள் என பலரும் அலுவலக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பாக, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது படைப்பிரிவு தளபதியாக சேவையாற்றியதுடன், மேற்படி பதவியில் இவருக்கு முன்பாக இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.