23rd April 2021 21:32:40 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் - 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா, கொவிட் – 19 பரவலின் கனிசமான அதிகரிப்பு தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். இதன்போது கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்திய தளபதி முடிந்த வரையில் எதிர்வரும் வாரங்களில் நடமாட்டங்களை குறைத்துக்கொண்டு வீடுகளில் இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அண்மைய புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் பொறுப்பற்ற நடமாட்டங்கள் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததென தெரிவித்த அவர் நாடு முழுவதையும் முடக்குவது தொடர்பிலான தீர்மானங்கள் எவற்றையும் எடுக்கவில்லை என்றும், குருணாகல் மற்றும் குளியாபிட்டி ஆகிய பகுதிகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டே சில பகுதிகள் மூடப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு " ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கான அநாவசியமான நடமாட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் , அதனை தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தேசிய கடமையாகக் கருதி முடிந்தவரை பெருமளவான ஒன்றுகூடல்களை தவிர்க்க வேண்டும். நமது அயல் நாடான இந்தியா உட்பட நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற நேரத்தில் தடுப்புப் பணிகள் மற்றும் கட்டுப்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினர்களுடனும் பொதுமக்கள் ஒத்துழைப்பாகச் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அதேபோல், புத்தாண்டின் ஆரம்பத்திற்கு முன்னர், முதல் கட்டத்தில் பரவலை திறம்பட கட்டுப்படுத்தினோம் , அன்றாட நோய்த்தொற்றுகளின் புள்ளிவிவரங்களை 100 - 150 என்ற வரையறைக்குள் பராமரித்தோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இருப்பினும், புத்தாண்டுக்கான ஆடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் எவ்வளவு கவனக்குறைவாக வியாபார நிலையங்களுக்கு வருகிறார்கள் என்பதை நாங்கள் கண்டோம், சில சந்தர்ப்பங்களில் சரியாக மறைக்கப்பட்ட முகக் கவசங்கள் இல்லாமலும் வருகின்றனர். அதனால் ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களில், எங்கள் குழுவினர் அனைவரும் பாராட்டத்தக்க ஒரு சேவையை செய்து வந்தனர், மேலும் வைரஸ் திரிபடைதல் என்ற சவாலின் தன்மையை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். புத்தாண்டு பருவத்தில் உங்கள் சொந்த நடமாட்டங்களின் எதிர் விளைவுகளை இன்னும் ஓரிரு தினங்களில் காணலாம், இவ்வாறான தவறுகளை எதிர்வரும் விடுமுறை தினங்களில் மீண்டும் செய்யக்கூடாது என”, ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவுறுத்தினார்.
மேற்படி ஊடகவியலாளர் சந்திப்பில், ஸ்ரீ ஜயர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூற்று மருத்துவ துறையின் பேராசிரியர் நீலிகா மாலவிகே, ஜனாதிபதி பிரதம ஆலோசகர் திரு லலித் வீரதுங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, மருத்துவ பொருட்கள் விநியோக பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான பிரசன்ன குணசேன ஆகியோருடன் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோரும் பங்குபற்றியதுடன், அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்கவும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டார். வீடியோ பதிவை கீழே காணலாம்