20th April 2021 23:45:43 Hours
பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கும் இடையில் கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் நேற்று (20) நடைபெற்ற சந்திப்பின் போது மே தினக் கூட்டங்களை இடைநிறுத்தும் தீர்மானத்திற்கு எட்டப்பட்டிருந்தது.
கடந்த வருடத்தில் இலங்கையில் கொவிட் -19 வைரஸ் பரவல் தொடர்பான புள்ளிவிவரங்கள், மரணங்கள், தொற்றுக்கு ஆளானவர்கள், குணமடைந்தவர்கள், தனிமைப்படுத்தல் நடைமுறைகள் போன்ற விடயங்கள் பற்றிய புள்ளிவிவரங்களை மேற்கோள் காண்பித்து கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் தகவல்களை விளக்கினார். அண்மைய புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் செயற்பாடுகள் மற்றும் அண்மைய நாடுகளின் நிலவரங்கள் என்பன தொடர்பாகவும் விளக்கமளித்தார்.
இந்த சந்திப்பில் பங்கேற்றவர்கள் வைரஸின் துரிதமான மாறுபாடுகள், பிற நாடுகளில் பரவும் தன்மை, புதிய கொத்தணிகள் உருவாகுதல் என்பவற்றுடன் தொடர்புடைய அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் சமூகத்தில் பெருமளவான இளைஞர்களுக்கு நோய் தொற்றுவதற்கு இருக்கின்ற வாய்ப்புகள் பற்றியும் 2020 மார்ச் மாதம் தொடங்கிய நோய் பரவல் நிலவரம் தொடர்பிலும் விளக்கினார்.
அதனையடுத்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் வைத்தியர் அசேல குணவர்தன அவர்களினால் பொது மக்களின் செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலான நிலைமைகள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் மற்றும் விஷேட வைத்திய நிபுணர்களின் விளக்கங்களை கேட்டறிந்த பின்னர் தங்களது நிலைப்பாடுகள் பற்றி அறிவித்ததுடன் நாட்டு மக்களின் நலனுக்கான முன்மொழியப்பட்ட திட்டமே தங்களது ஏகமனதான தீர்வெனவும் அறிவித்தனர்.
கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் கூட்டத்தில் போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எஸ்.எம்.மரிக்கார், கௌரவ மொஹமட் முஸம்மில் எம்.பி உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் தேசிய தொற்றுநோயியல் பிரிவின் விஷேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம, தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர, கொழும் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் மனோஜ் வீரசிங்க, சுகாதார அமைச்சின் கொவிட் – 19 விவகாரங்கள் தொடர்பான ஒருங்கிணைப்பு பொறுப்பதிகாரி, வைத்தியர் ரோஹித முத்துகல, சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் நிபுணர் நதீக ஜானகே, கீலேய் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பீடத்தின் பேரசிரியர் அதுல சுமதிபால, ஜனாதிபதியின் பொது சுகாதார விவகாரங்கள் தொடர்பான ஆலோசகர் திரு எம்ஜி உபுல் ரோஹன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அதனையடுத்து கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் மற்றும் விஷேட வைத்திய நிபுணர்கள் தலைமையில் வழமையான கொவிட் - 19 தடுப்புக்கான குழுவின் கூட்டம் நடைபெற்றதுடன் அதன்போது, புத்தாண்டு காலத்தில் பொதுமக்களின் ஒன்றுகூடல் செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது.