17th January 2025 15:20:32 Hours
'நாடு எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு, நாம் நமது கடமையை வலுவான சுய ஒழுக்கத்துடனும் உண்மையான அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ள வேண்டும், மேலும் பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலுடன் செயல்பட வேண்டும்' என்று பதில் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 16) கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது கருத்து தெரிவித்தார்.
வைத்தியசாலைக்கு வருகை தந்த பதில் பாதுகாப்பு அமைச்சரை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் முதன்மையான வைத்திய நிலையத்தின் வைத்திய பணிப்பக விளக்கக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பு, பல வார்டுகள் மற்றும் வைத்தியசாலை வளாகத்தின் வசதிகள் தொடர்பான ஆய்வு விஜயம் மேற்கொண்டார்.
வைத்தியசாலை வழங்கும் பெருமதிமிக்க சேவைகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த அவர், தற்போதைய சகாப்தத்திற்கு புதிய மற்றும் உன்னதமான அரசியல் கலாசாரம் தேவை என்று வலியுறுத்திய அவர் அங்கு ஊழல் எந்த வடிவத்திலும் சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் சகிக்க முடியாதது என்றும் தெரிவித்தார். மக்களின் வாழ்க்கையில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக-பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்வதற்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் 'தூய இலங்கை' திட்டம் இந்த உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.
தனது வருகையின் போது நோயாளர்கள், வைத்தியசலை ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு வருகை தந்தவர்களுடன் கலந்துரையாடினார்.
தனது வருகையின் நிறைவாக, பதில் பாதுகாப்பு அமைச்சர் பதவியேற்ற பின்னர் வைத்தியசாலைக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ வருகையை குறிக்கும் வகையில் அதிதிகள் புத்தகத்தில் கருத்துக்களை பதிவிட்டார்.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், மருத்துவமனையின் வைத்திய மற்றும் நிர்வாக ஊழியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
(கட்டுரை: பாதுகாப்பு அமைச்சு)