04th January 2025 21:50:05 Hours
புதிய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 04 ஜனவரி 2025 அன்று கண்டி புனித ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டார்.
இலங்கை இராணுவத்தின் 25 வது தளபதியாக பதவியேற்ற பின்னர் தளபதியின் முதலாவது விஜயம் ஸ்ரீ தலதா மாளிகைக்கான விஜயமாகும். அங்கு வருகை தந்த இராணுவத் தளபதியை ஸ்ரீ தலதா மாளிகையின் நிர்வாகச் செயலாளர் வரவேற்றார்.
தியவடன நிலமே (ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதம பாதுகாவலர்) திரு. நிலங்க தெல பண்டார அவர்கள் தளபதிக்கு மல்லிகைப் பூக்களை வழங்கி வரவேற்றதுடன், நிகழ்வின் நினைவாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார். இதற்காக இராணுவத் தளபதி அவரை பாராட்டினார். தொடர்ந்து, தளபதி அதிகாரிகளுடன் ஸ்ரீ தலதா மாளிகை புனித ஸ்தலத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
பின்னர், சம்பிரதாய மரபுகளுக்கு இணங்க மல்வத்தை மடத்திற்குச் சென்ற இராணுவத் தளபதி, அங்கு மல்வத்தை பீடத்தின் பிரதம பீடாதிபதியான வண. திப்படுவெவ ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். பின்னர் இருவரும் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இந்த விஜயத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.