03rd January 2025 16:40:42 Hours
கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் 45 வது பிரதி இராணுவ பதவிநிலைப் பிரதானியாக 02 ஜனவரி 2025 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார். இது இலங்கை இராணுவத்தின் மூன்றாவது மிக உயர்ந்த நியமனம் ஆகும்.
சமய ஆசீர்வாதங்கள் மற்றும் வழிப்பாடுகளை வண. பலாங்கொடை அமரஜோதி தேரர், வண. அளுத்வெல ரத்தனசிறி தேரர், மற்றும் வண. லுணுகம்வெஹர விமலானந்த தேரர் ஆகியோர் நடாத்தினர். ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் கஜபா படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந்த நியமனத்திற்கு முன்னர், அவர் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் சுருக்கமான விபரம்
மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் 26 ஜூன் 1970 இல் மாத்தளையில் பிறந்தார். மாத்தளை விஜயா கல்லூரி மற்றும் கண்டி தர்மராஜா கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவரான இவர், கல்வியிலும் இணைப்பாடவிதான நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கினார். ஒரு துடிப்பான விளையாட்டு வீரராக, இவர் தடக்களம், டேக்வாண்டோ மற்றும் ரக்பி ஆகியவற்றில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். மனம் மற்றும் உடலுக்கான அர்ப்பணிப்பு அவரது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது.
அவர் 1989 இல் இலங்கை இராணுவத்தின் பயிலிளவல் அதிகாரி பாடநெறியில் (Intake 31 IMA) இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி (SLMA) மற்றும் இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெற்றார். அவரது வாழ்க்கை முழுவதும், அவர் கட்டளை, பணிநிலை மற்றும் பயிற்றுவிப்பாளர் போன்ற பல முக்கிய நியமனங்களை வகித்துள்ளார்.
8 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் படையலகு மட்டத்தில், அனைத்து முக்கிய நியமனங்களையும் வகித்துள்ளார். 2007 முதல் 2008 வரை ஹைட்டி ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் நடவடிக்கையில் நிர்வாக பிரிவின் (U1) சிரேஸ்ட பணிநிலை அதிகாரி (ஆளணி) ஆக பணியாற்றியதன் ஊடாக அவர் சர்வதேச அங்கிகாரத்தை பெற்றார். பின்னர் அவர் கஜபா படையணி தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 1 (நிர்வாகம்), திருகோணமலை 22 வது காலாட் படைபிரிவின் கேணல் பொதுப்பணி, 511 மற்றும் 224 வது காலாட் பிரிகேட்களின் தளபதி மற்றும் 51 மற்றும் 52 வது காலாட் படைபிரிவுகளின் கட்டளை தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும், பாதுகாப்பு அமைச்சின் இராணுவப் பேச்சாளர், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் ஊடகப் பணிப்பாளர் மற்றும் 2019 டிசம்பர் முதல் 2021 மார்ச் வரை இராணுவத் தலைமையகத்தின் ஊடகப் பணிப்பாளர் உட்பட ஊடகத் துறையில் பல நியமனங்களை வகித்துள்ளார். மேலும், அவர் உதவி இராணுவச் செயலாளராகவும் இராணுவச் செயலாளராகவும் நிறைவேற்று நிர்வாக பணிப்பாளர் நாயகமாகவும் இராணுவத் தலைமையக பொதுப்பணி பணிப்பாளர் நாயகமாகவும், யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாகவும், இயந்திரவியல் காலாட் படையணி படைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
சிரேஷ்ட அதிகாரி கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டத்தை முடித்துள்ளார். அவர் கொரிய குடியரசின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் போர் ஆய்வினை கற்றுள்ளார். அத்துடன் கொரிய தேசிய தரத்திலான மொழி புலமையினையும் பெற்றுள்ளார். கொரியா குடியரசின் நொன்சான் நகரம் அவருக்கு கௌரவ குடியுரிமையினை வழங்கியுள்ளது, மேலும் சிங்கப்பூர் 6 வது ஆசிய கல்வி தலைமைத்துவ விருதும் பெற்றவர் ஆவார்.
மேலும், அவர் கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி கற்கைகள் பீடம், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், மாலைத்தீவு பாதுகாப்பிற்கான பயிற்சி மற்றும் கல்வி நிறுவனம் மற்றும் இலங்கை பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி ஆகியவற்றின் வருகை விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். சிரேஸ்ட அதிகாரி சர்வதேச உறவுகள் ஒழுக்கத்தில் தீவிர கல்வி ஆர்வத்தைக் கொண்டுள்ளதுடன் இராணுவ மூலோபாயம், சர்வதேச பாதுகாப்பு, உணர்ச்சி நுண்ணறிவு, முகாமை, தலைமைத்துவம் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் தொடர்ந்து விரிவுரைகளை நடத்துகிறார். அவரது கல்வி சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கைகள் பீடத்தின் முதல் ஆய்வு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அதே பீடத்தின் பீடாதிபதியாகவும் பதவி உயர்த்தப்பட்டார்.
அவர் பல ஆய்வுக் கட்டுரைகளை கல்வி மன்றங்களுக்கு சமர்ப்பித்துள்ளார் அத்துடன் பெரும் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். இந்த விரிவான அனுபவம் வாய்ந்த சிரேஸ்ட அதிகாரி சிவில்-இராணுவ ஒத்துழைப்பு பூங்கா (CIMIC பூங்கா) எனும் ஒரு புதுமையான திட்டத்தை உருவாக்கினார். அவரது தலைமையின் கீழ், கோப்பாய், பலாலி மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் மூன்று சிவில்-இராணுவ ஒத்துழைப்பு பூங்காக்களை நிறுவியதன் ஊடாக பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வளர்த்து, அதன் மூலம் சிவில் சமூகத்தின் பரவலான ஏற்றுக்கொள்ளலுடன் சிவில்-இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தினார்.
அவரது தொழில்முறை சாதனைகளுக்கு மேலதிகமாக, அவர் ரக்பியில் சிறந்து விளங்கினார். அத்துடன் டேக்வாண்டோவில் 1வது டான் பிளாக் பெல்ட்டைப் பெற்றுள்ளார். அவர் "ஈக்வடார் 2014" என்ற தலைப்பில் 2வது உலக பயிலிளவல் விளையாட்டு போட்டியின் குழு முகாமையாளராகவும் பயிற்றுவிப்பாளராகவும் பங்கேற்றார். அவர் தற்போது இராணுவ ரக்பி குழுவின் தலைவராக பணியாற்றுகின்றார்.
சிரேஸ்ட அதிகாரி, விரிவான தகுதிகளுடன் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தாய்நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட சேவையுடன், ரண விக்கிரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் ஆகியவற்றைப் பெற்றவர். அவர் எம்பில் பெற்று தற்போது ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில், “இலங்கையின் பாதுகாப்பு நிலப்பரப்பில் இந்தியப் பெருங்கடலில் 21 ஆம் நூற்றாண்டின் சக்தி போட்டியின் தாக்கம்” என்ற தலைப்பில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளார்.
மேலும், அவர் தேசத்திற்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காக தேசமாமக மற்றும் தேச கௌரவ கீர்த்தி ஆகிய பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். அவர் திருமதி பிரியங்கா விக்கிரமசிங்கவை மணந்துள்ளதுடன் ஒரு மகன் மற்றும் மகளுக்கு தந்தை ஆவார்.