03rd January 2025 13:01:30 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் வியாழக்கிழமை (02) பிற்பகல் 150 இற்கும் மேற்பட்ட சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.
அவர் தனது உரையின் போது, தனது பணிக்காலம் முழுவதும் விலைமதிப்பற்ற வழிகாட்டுதலுக்காக கடந்த தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தார். அமைதியான இலங்கைக்காக உயிர் தியாகம் செய்த வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே வேளையில், தேசத்தைப் பாதுகாப்பதும் அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டுக் கடமையினையும் வலியுறுத்தினார்.
இலங்கை இராணுவத்தை ஒரு "சிப்பாய்களை மையமாகக் கொண்ட அமைப்பாக" மாற்றுவதற்கான தனது எண்ணத்தை இராணுவத் தளபதி பகிர்ந்து கொண்டார். இலக்கு பயிற்சித் திட்டங்கள் மூலம் வீரர்களின் திறன்களை மேம்படுத்துவது மற்றும் அவர்களின் செயல்பாட்டுத் தயார்நிலையை ஆதரிக்க தேவையான உபகரணங்களை வழங்குவதற்கான திட்டங்களை அவர் கோடிட்டுக் காட்டினார். மேலும், அவர் இராணுவத்தின் அடிப்படை மதிப்புகள் தேசபக்தி, ஒழுக்கம், விசுவாசம், ஒருமைப்பாடு, மரியாதை, அறிவு, தைரியம், வீரம், ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்த வளங்களின் பாதுகாப்பு மற்றும் நீண்ட பாவனையினை உறுதி செய்யும் அதே வேளையில் உபகரணத் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசரத் தேவையை தளபதி எடுத்துரைத்தார். தொழில்நுட்ப ரீதியாக திறமையான மற்றும் உயர் வளங்களை கொண்ட படையை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்குமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையில், அலுவலக முகாமை மற்றும் நுணுக்கமான ஆவணப்படுத்தல் நடைமுறைகளுக்கு ஊக்கமளித்தார்.
இராணுவத்தினுள் கடுமையான ஒழுக்காற்றுத் தரங்களைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் இராணுவத் தளபதி வலியுறுத்தினார். அரசாங்கத்தின் "அழகான வாழ்க்கை மற்றும் தூய இலங்கை" திட்டத்திற்கு தொடர்ச்சியாக பங்களிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு தெரிவித்துக் கொண்டார்.
முடிவில், தளபதி தைரியம், அறிவு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்புகளை அதிகாரிகளுக்கு நினைவுபடுத்தினார். தேசம், அமைப்பு மற்றும் அவர்களின் தொழில்சார் பொறுப்புகளின் எதிர்பார்ப்புகளை அசைக்க முடியாத உறுதியுடன் முகம்கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் முதன்மைப் பணி நிலை அதிகாரிகள் , பணிப்பாளர்கள், களத் தளபதிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.