25th November 2024 06:36:43 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இலங்கை முப்படைகளின் சேனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இன்று (24) நடைபெற்ற ஆயுதப்படைகளின் நினைவு தினம் – 2024 மற்றும் பொப்பி மலர் தின நிகழ்வில் கலந்துகொண்டார். கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் உள்ள நினைவு தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கம், ஆயுதப்படைகளுடன் இணைந்து, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக தியாகத்தை செய்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்த வருடாந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. முதலாம் உலகப் போர் முதல் இன்று வரையிலான மோதல்களில் தங்கள் உயிரைக் கொடுத்தவர்களும் இதில் அடங்குவர்.
நிகழ்விடத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை, இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பொதுச் செயலாளர் லெப்டினன் கேணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வு) வரவேற்றார்.
மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, உயிர்நீத்த வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மௌன அஞ்சலியின் பின்னர் ஜனாதிபதி அவர்கள் கௌரவ அதிதிகள் மற்றும் இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் போர் நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா (ஓய்வு), பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, வெளிநாட்டு தூதுவர்கள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை முன்னாள் படைவீரர் சங்க உறுப்பினர்கள், நாட்டுக்காக உயிர் நீத்த முப்படை வீரர்களின் குடும்ப உறவினர்கள் பங்குபற்றினர்.
(புகைப்படம் ஆதாரம்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)