23rd November 2024 11:37:32 Hours
அனைத்து அரச உத்தியோகத்தர்களும் பொதுவான நோக்கத்துடன் ஒன்றிணைந்து தாய்நாட்டை சிறந்த தேசமாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். புதிய பாதுகாப்பு அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டு அக்குரேகொட பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு இன்று (22) விஜயம் செய்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
வருகை தந்த ஜனாதிபதியை பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் அன்புடன் வரவேற்றனர். வரவேற்பைத் தொடர்ந்து, முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை நடத்திய ஜனாதிபதி, அங்கு அமைச்சின் தற்போதைய மற்றும் எதிர்கால முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார். புதிய அரசாங்கம் நல்லாட்சியை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அனைவரினதும் ஆதரவை நாடுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் எதுவாக இருந்தாலும் மக்களின் அதிகாரம் வலுவாக உள்ளது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் வழங்கப்பட்ட ஆணைகளின் கட்டமைப்பு மற்றும் வடிவங்களைப் பார்க்கும் போது அவர்களின் எதிர்பார்ப்புகள் பிரதிபலிக்கின்றன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்த மாற்றம் அவர்களினதும் எதிர்பார்ப்பு என்பது அண்மைக்கால தேர்தல் வரலாற்றில் அரச சேவையினால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட சுமார் 80% ஆணை எடுத்துக்காட்டுகிறது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
எனவே, தமது அரசாங்கத்திற்கு மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதனை நனவாக்க அரச ஊழியர்களின் ஆதரவு அவசியம் என்றார். அனைவரும் எதிர்பார்க்கும் இந்தப் புதிய மாற்றத்தில், அரச சேவையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற முடியாது என்றும், வளர்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியது அரச சேவைதான் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா (ஓய்வு), பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பாதுகாப்பு படை உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.