Header

Sri Lanka Army

Defender of the Nation

11th November 2024 06:29:49 Hours

தேசிய மாணவ சிப்பாய் படையணியின் விடுகை அணிவகுப்பு விழாவில் இராணுவ தளபதி

பாடசாலை மாணவர்களுக்காக பாதுகாப்பு அமைச்சினால் நிர்வகிக்கப்படும் தேசிய மாணவ சிப்பாய் படையணியின் தேசிய மட்ட போட்டிகளான ஹெர்மன் லூஸ் / டி சொய்சா சவால் கிண்ண முகாமின் விடுகை அணிவகுப்பு ரன்டெம்பே தேசிய மாணவ சிப்பாய் பயிற்சி நிலையத்தில் 10 நவம்பர் 2024 இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் உள்ள 4485 பாடசாலை மாணவச் சிப்பாய் குழுக்களில் 60 மாணவ சிப்பாய் குழுக்கள் இறுதி போட்டிகளில் கலந்துகொண்டன.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

தேசிய மாணவ சிப்பாய் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எஸ் பொன்சேகா யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் அன்றைய பிரதம விருந்தினரை நுழைவாயிலில் வரவேற்றதுடன், பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் விடுகை அணிவகுப்பை ஆய்வு செய்தார்.

பின்னர், முகாமில் சாதனை படைத்தவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைப்பதற்கு அழைக்கப்பட்டார்.

பரிசளிப்பு விழாவின் போது, கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவ சிப்பாய் குழு ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பெற்று 2024 ஆம் ஆண்டிற்கான நாட்டின் சிறந்த மாணவச் சிப்பாய் குழுவிற்கான ஹெர்மன் லூஸ் கிண்ணத்தைப் பெற்றுக்கொண்டது.

அம்பலாங்கொடை தர்ம அசோகா கல்லூரியும், கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கான கிண்ணங்களை பெற்றுக்கொண்டன.

இதேவேளை, பெண்கள் பிரிவில் சிறந்த குழுவிற்கான டி சொய்சா கிண்ணத்தை குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரி பெற்றுக்கொண்டதுடன், கண்டி மஹாமயா பெண்கள் கல்லூரி மற்றும் கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயம் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.

பொதுவாக, ஹெர்மன் லூஸ் சம்பியன்ஷிப் கிண்ணம் வருடாந்தம் ஆண்களுக்கான பாடசாலையொன்றிலிருந்து சிறப்பாகச் செயற்படும் மாணவ சிப்பாய் குழுவிற்கு வழங்கப்படுவதுடன், டி சொய்சா சம்பியன்ஷிப் பெண்கள் பாடசாலை ஒன்றிலிருந்து சிறப்பாகச் செயற்படுபவர்களுக்கு வழங்கப்படும்.

இந்நிகழ்வில் பிரதம அதிதி உரையின் போது சவால்களை ஒழுக்கத்துடன் எதிர்கொள்ளும் வகையில் பயிற்றுவிக்கப்பட்ட இளைய சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்காக தேசிய மாணவ சிப்பாய் படையணியை பாராட்டினார். மேலும், தனது நினைவுகளை நினைவுகூர்ந்த அவர், 40 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய மாணவ சிப்பாய் படையணியில் மாணவ சிப்பாயாக பயிற்சி பெற்றதாகவும், அவ்வாறான தன்னை பிரதம விருந்தினராக அழைத்ததற்காக தேசிய மாணவ சிப்பாய் படையணிக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர், பொதுமக்களுக்கு இராணுவ வீரர்களின் கவர்ச்சிகரமான திறன்களை வெளிப்படுத்தும் சிறப்பு இராணுவ கண்காட்சியும் அரங்கேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தேநீர் விருந்துபசாரம் மற்றும் குழு படங்கள் எடுத்துக் கொண்டதைத் தொடர்ந்து தேசிய மாணவ சிப்பாய் படையணியின் பணிப்பாளர் இராணுவத் தளபதிக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

நிகழ்வின் நிறைவாக இராணுவத் தளபதி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டு குறிப்புகளை பதிவிட்டார்.

மதகுருமார்கள், இராணுவம் மற்றும் விமானப்படையின் பதவிநிலை பிரதானிகள், தொண்டர் படையணியின் தளபதி, பங்களாதேஷ் பாதுகாப்பு இணைப்பாளர், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், ஓய்வுபெற்ற இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ சிப்பாய்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் விடுகை அணிவகுப்பினை கண்டுகளித்தனர்.