20th May 2024 17:08:42 Hours
இலங்கையில் வேறான நாடு அமைக்க வேண்டும் என்று போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்றன. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதால், இந்த வெற்றி அனைத்து இலங்கையர்களுக்கும் குறிப்பிடத்தக்கதாகும். பெரும் துன்பங்களை ஏற்படுத்திய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து மக்களுக்கு அமைதியை ஏற்படுத்தியதை நினைவுகூரும் "வெற்றி தினத்தில்" இந்த செய்தியை மிகுந்த பெருமையுடன் வெளியிடுகிறேன்.
பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து இலங்கை மக்களை மீட்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பல சமாதானப் பேச்சுக்கள் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கைகள் இருந்த போதிலும், ஈழ அரசை உருவாக்கும் இலக்கில் புலிகள் உறுதியாக இருந்தனர். தேசத்தைப் பாதுகாப்பதற்கான புலிகளின் இந்த நோக்கங்களை முறியடிக்க இலங்கை ஆயுதப் படைகள் உறுதி பூண்டுள்ளன. மக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகத்தை துண்டித்து மாவிலாறு மதகு மூடப்பட்டது போன்ற புலிகளின் மனிதாபிமானமற்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையானது கிழக்குப் பிராந்தியத்தை பயங்கரவாதக் கட்டுப்பாட்டிலிருந்து வெற்றிகரமாக விடுவித்தது, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்தது.
கிழக்கின் விடுதலையைத் தொடர்ந்து வன்னிப் பகுதியில் மனிதாபிமான நடவடிக்கை தொடர்ந்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்த இந்த நடவடிக்கை, 19 மே 2009 பயங்கரவாதத்திலிருந்து நாட்டை முழுமையாக விடுவிப்பதோடு நடவடிக்கை நிறைவை எட்டியது. இந்த வரலாற்று வெற்றியானது பயங்கரவாதிகளால் மனிதக் கேடயங்களாக வைத்திருந்த 300,000 க்கும் மேற்பட்ட பொது மக்களை விடுவித்து, மீட்பு நடவடிக்கைக்கான உலக சாதனையை படைத்தது. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் அனைத்து இலங்கையர்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த வெற்றியானது நாட்டிலுள்ள அனைவரினதும் கூட்டு முயற்சியாகும் மேலும் அனைத்து மட்டங்களிலும் உள்ள இராஜதந்திர தலைமைகள், முப்படைத் தளபதிகள் மற்றும் வீரமிக்க வீரர்களின் பங்களிப்பை நாம் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், தாய்நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த அனைத்துப் போர்வீரர்களையும், சிகிச்சை பெற்று வருபவர்களையும் கௌரவிக்கிறோம். இன்னும் சிகிச்சை பெற்று வரும் போர்வீரர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகின்றேன்.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்த இலங்கை இராணுவம், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும் போதும், தேசிய அபிவிருத்தி மற்றும் மக்கள் நலனில் தொடர்ந்தும் முக்கிய பங்கை ஆற்றி வருகின்றது. சமீபத்திய சமூக மற்றும் அரசியல் சவால்களை எதிர்கொள்வதில் இராணுவம் முக்கிய பங்காற்றியுள்ளது. பொறுமையுடனும், ஒழுக்கத்துடனும் இலங்கை மக்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்த வீரமிக்க போர் வீரர்களை நாம் நினைவுகூருகின்றோம். நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாப்பதும், இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல்களை அடக்குவதும், தேசியப் பாதுகாப்பை நிலைநாட்டுவதும் இலங்கை இராணுவத்தின் முதன்மைக் கடமையாகும்.
15 வது வெற்றி தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில், இராணுவ வீரர்கள், "தேசத்தின் பாதுகாவலர்கள்", ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் சிவில் ஊழியர்களின் நலனுக்காக மேலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை நினைவு கூற விரும்புகிறேன். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த்தைப் போன்று தாய்நாட்டைப் பாதுகாப்பது எமது பொறுப்பு என்பதை இந்த நேரத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். தாய்நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எமக்கு வழங்கப்பட்டுள்ள பங்கை நிறைவேற்றுவது இன்றியமையாததாகும். இராணுவத்தின் கெளரவம், நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் உங்களது பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
உங்களை மும்மணிகள் ஆசீர்வதிக்கட்டும்!