11th May 2024 07:40:01 Hours
தம்புள்ளை மற்றும் கலேவெல பிரதேசங்களில் வசிக்கும் 500 க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற போர் வீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பங்கேற்புடன் அவர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாக கொண்ட ஒரு கலந்துரையாடலை 53 வது காலாட் படைப்பிரிவில் 11 மே 2024 அன்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சம்பளம் மற்றும் பதிவுகள் பணிப்பகம், இராணுவ நலன்புரி நிதிய பணிப்பகம், ஆளனி நிர்வாக பணிப்பகம், சட்ட சேவைகள் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட பணிப்பகம், நலன்புரி பணிப்பகம், போர்வீரர்கள் விவகார பணிப்பகம் மற்றும் இராணுவ மருத்துவ சேவை பணிப்பகம் ஆகிய இராணுவ தலைமையகத்தின் ஏழு பணிப்பகங்கள் அங்கு போர் வீரர்களின் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் விடயங்களை தெரிவிக்க வசதியாக நிறுவப்பட்டிருந்தன.
இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிகள் குழுவுடன் இணைந்து வருகை தந்த பிரதம அதிதியை மரியாதையுடன் வரவேற்றார். போர்வீரர்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்.சி ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தனது உரையின் போது, வீரமரணமடைந்த போர் வீரர்களை நினைவு கூர்ந்ததுடன், தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவையை பாராட்டினார். மேலும், படையினர் சவாலான காலங்களில் பொறுமையுடன் தங்கள் கடமைகளை நிறைவேற்றிய சுறுசுறுப்பான சேவையை அவர் பாராட்டினார். மேலும், தற்போது நடைபெற்று வரும் நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
பின்னர், பங்கேற்பாளர்களுக்கு தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும், தங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்தவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், இராணுவத் தளபதி மற்றும் அந்தந்த சிரேஷ்ட அதிகாரிகள் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
பின்னர், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஏற்பாட்டில் உயிரிழந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கு 81 உலர் உணவுப் பொதிகள் பிரதம அதிதியால் விநியோகிக்கப்பட்டன.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.சி.கே வனசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள், போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.